பக்கம்:ஆடரங்கு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு தோழர்கள்

107


“ராமுவுடைய மாமாவுக்கு இதற்கெல்லாம்‌ ஐந்து ரூபாய்‌ வேண்டுமாம்‌" என்றான்‌ ராமு.

'ஐந்து ரூபாயா? அவரிடமே திருப்பி எறிந்துவிடு!' என்று சொல்ல முதலில்‌ எண்ணினேன்‌. பிறகு ராமுவின்‌ முகத்தைப்‌ பார்த்தேன்‌. “சரி, ஐந்து ரூபாயைக்‌ கொண்டு போய்க்‌ கொடுத்துவிடு; ராஜியைக்‌ கேட்டு வாங்‌கிண்டு போ!” என்றேன்‌. ராமு முகம்‌ மலர உள்ளே போய்விட்டான்‌.

இந்தச்‌ சம்பவத்துக்கு ஏழெட்டு நாட்களுக்குப்‌ பிறகு தான்‌ நான்‌ கவனித்தேன்‌. ராமு இப்போதெல்லாம்‌ உரக்கப்‌ படிப்பதே இல்லை; படித்தானானால்‌-அதுவே எனக்குச்‌ சந்தேகமாகத்தான்‌ இருந்தது. மனசிற்குள்தான்‌ படித்துக்‌ கொண்டான்‌. நான்‌ அவனுக்கு வருஷ ஆரம்பத்தில்‌ வாங்கிக்‌ கொடுத்த புஸ்தகங்களை அவன்‌ தொடுவதே இல்லை, இறந்துபோன ராமுவின்‌ புஸ்தகங்களையும்‌ நோட்டுப்‌ புஸ்தகங்‌களையும்‌ பிரித்து வைத்துக்கொண்டு மணிக்கணக்காகப்‌ பேயறைந்தவன்‌ போல உட்கார்ந்துருப்பான்‌. நான்‌ கவனிப்‌பதைக்‌ கவனித்தால்‌ சில சமயம்‌ திடுக்கிட்டு விழித்தெழுவான்‌. நான்‌ கவனிப்பதைக்‌ கவனிக்காமலே இருந்துவிடுவான்‌ பல தடவைகளில்‌,

பரீட்சை நெருங்கிக்கொண்‌ டிருந்தது.

ஒரு நாள்‌ இரவு எங்கள்‌ ராமு படித்துக்கொண்‌ டிருந்ததை வெகு நேரமாகக்‌ கவனித்துக்கொண்டிருந்த ராஜி சொன்னாள்‌: “ராமு கையை வைக்காமலே, பக்கம்‌ புரளுகிறதே!” என்றாள்‌.

“போடி அசடே!" என்றேன்‌ நான்‌.

"அதென்னவோ, இதற்கு முன்பு கூட நான்‌ நாலைந்து தடவை பார்த்துவிட்டேன்‌. காற்று இல்லாதபோதுகூட ராமுவுக்கு முன்னால்‌ இருக்கிற புஸ்தகத்தை, யாரோ கண்ணில்‌ படாத ஒருவர்‌ புரட்டுகிற மாதிரி இருக்கிறது. பக்கங்கள்‌ தாமாகப்‌ புரளுகின்றன!” என்றாள்‌ ராஜி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/112&oldid=1523742" இலிருந்து மீள்விக்கப்பட்டது