பக்கம்:ஆடரங்கு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனை

113

இந்தச் சர்வதேசக் கதைகளின் அட்டையில் போட்டிருந்த ஜெர்மனி, இத்தாலி என்கிற விஷயத்தை ஒரு போலீஸ் மேலதிகாரியும் ஒரு போலீஸ் சின்ன அதிகாரியும் தொண்ணூறு நிமிஷங்களுக்கு மேல் விவாதித்தார்கள், விவாதித்தார்கள், விவாதித்தார்கள்; இரவு இரண்டு மணி வரையில் விவாதித்தார்கள்.”

"வேடிக்கையாக இருக்கிறதே!" என்றார் நண்பர்.

"எனக்கு அப்போது அது வேடிக்கையாக இல்லை. அவர்கள் விவாதம் எப்படி முடியுமோ என்ற பீதியுடன் நான் காத்திருந்தேன். ஜெர்மனி, இத்தாலி என்கிற பெயர் போட்ட புஸ்தகங்களில் என்ன என்ன இருக்கலாம் என்று இரண்டு போலீஸ் அதிகாரிகளும் முடிவு கட்ட முயன்றபோது, நானே பயந்துபோனேன்......"

"அன்றிரவு உலகத்தில் சிறந்த இரண்டு கதைகளுக்கு வேறெவ்விதத்திலும் கிடைத்திருக்க முடியாத இரண்டு போலீஸ் வாசகர்கள் கிடைத்து விட்டார்கள்" என்றார் நண்பர்.

"மூன்று மணி சுமாருக்கு அந்தப் புஸ்தகங்களில் ரகசிய பாஷை, சங்கேதங்கள், விரோதி தேசங்களுக்குச் சாதகமான தகவல்கள், காங்கிரஸ் அநுதாப இலக்கியம்- எதுவும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தார்கள் போலீஸ் அதிகாரிகள்.”

நண்பர் சொன்னார்: "போயும் போயும் நீங்களும் ஜெர்மனி, இத்தாலி என்று விரோத தேசக் கதைகளைத்தானே பார்த்து மொழி பெயர்த்தீர்கள்? நேச தேசக் கதைகளாகப் பார்த்து வெளியிட்டிருக்கக் கூடாதோ?"

"செய்திருக்கலாம், முந்திய யுத்தத்தில் ஏற்பட்ட இந்த அநுபவத்தின் காரணமாக அடுத்த யுத்தத்தில் நான் நேச தேசங்களின் கதைகளை மட்டுமே படிப்பது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது உலக யுத்தத்தில் விரோத தேசங்கள் எவை எவை, நேச தேசங்கள் எவை எவை என்று....."

க—8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/118&oldid=1523750" இலிருந்து மீள்விக்கப்பட்டது