பக்கம்:ஆடரங்கு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஆடரங்கு


நான் வாக்கியத்தை முடிக்குமுன் நண்பர் குறுக்கிட்டார். "வேண்டாம். பேச்சு மறுபடியும் அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு என்கிற விஷயத்துக்கே திரும்பிவிடும்போல் இருக்கிறதே! வேண்டாம், நான் சொல்ல வந்த போலீஸ் சோதனைக் கதையைச் சொல்லி விடுகிறேன்" என்று சொல்லத் தொடங்கினார் நண்பர்.

****

துவும் கிட்டத்தட்ட நள்ளிரவு சமயத்தில் நடந்த ஒரு சோதனைக் கதைதான். உண்மையாகவே நடந்தது. ஏனென்றால் இதில் ஒரு பகுதியை நான் நேரில் பார்த்தேன். மற்றப் பகுதி பிறகு கேள்விப்பட்டதாகும். முதலில் நான் நேரில் கண்டதைச் சொல்லி விடுகிறேன்.

சாதாரணமாக நாங்கள் இரண்டு மூன்று பேர்வழிகள் தினம் இரவு பத்து மணிக்கு ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் 'வாக்' போவோம்; 1942 சமயத்தில்தான் என்று ஞாபகம். தினம் இவர்கள் இரவு கூடி ஸ்டேஷன் பக்கம் போகிறார்களே என்று ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளும் பல நாள் எங்களைப் பின் தொடர்ந்து வந்துகொண் டிருந்தான் என்பது எங்களுக்குப் பின்னர் பல நாட்கள் வரையில் தெரியாது. ஆனால் இதற்கும் நான் சொல்ல வந்த கதைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

'வாக்'கென்று கிளம்புவோமே தவிர நாங்கள் மூவருமே உண்மையில் அகாலத்தில் காபி சாப்பிடுவதை விரும்பிப் போகிறவர்கள்தாம். ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில், சாயங்காலமாகத் திறக்கிற ஒரு சிறு ஹோட்டலில் அந்தக் காலத்தில் நல்ல காபியாகக் கிடைக்கும். இரவு அந்தக் காபியைக் குடித்துவிட்டுத்தான் தூங்குவது என்கிற காரியத்தை நாங்கள் நாள் தவறாமல் செய்துகொண் டிருந்தோம். இரவு அகாலத்தில் காபி சாப்பிட்டால் தூக்கம் வராது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் நான். ஆனால் எங்களுடைய அநுபவம் இதற்கு நேர்மாறானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/119&oldid=1523751" இலிருந்து மீள்விக்கப்பட்டது