பக்கம்:ஆடரங்கு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

ஆடரங்கு

கொண்டு இன்னும் பத்தடி நடப்பார்கள். மறுபடியும் மண் வெட்டி எடுத்து வெட்டுவார்கள்.

எங்களுக்குக் கால் கடுக்கத் தொடங்கியது. காபி ஞாபகமும் தலை தூக்கியது. 'போகலாம்' என்று கிளம்புகிற சமயம் காஸ்லைட்டுகளும் போலீஸ் கோஷ்டியினரும் அவர்களுடன் இருந்த ஸ்திரீயும் ரோட்டுப் பக்கம் வருவது போலத் தெரிந்தது. பார்க்கலாமே என்று நின்றோம்.

காவல் நின்ற போலீஸ்காரன் எங்களைப், "போங்களையா! போங்களையா!" என்று அங்கிருந்து விரட்டினான். அவன் சொன்னது காதில் விழாதமாதிரியே நாங்கள் நின்றோம்.

காஸ்லைட்டுகளும் போலீஸ் கோஷ்டியும் அவர்களுடன் இருந்த ஸ்திரீயும் ரோடு ஓரத்துக்கு வந்துவிட்டார்கள். அந்தப் பெண்ணுக்கு வயசு இருபதுக்குள்தான் இருக்கும். அவளுடைய கண்கள் அழுதழுது சிவந்திருந்தன. முகம் விங்கியிருந்தது. கூலிவேலை செய்து பிழைக்கிற பெண்போலும் என்று எண்ணினோம்.

போலீஸ்காரர்களில் ஒருவன் சற்று சற்று அதட்டலாகவே சொன்னான். “இதோ பார்! அழுது அழுது ஏமாத்தி விடலாம்னு பாக்காதே! ஏமார்றவங்க நாங்க இல்லை! உன்னைப்போல மாய் மாலக்காரிங்க எத்தனையோ பேரை நாங்க பார்த்திருக்கோம்!" என்றான்.

வேறு ஒருவன் சொன்னான், "கழுத்தைத் திருகிப் புதைச்சதில் குறைச்சல் இல்லை. இப்போ ரோஷம் வரது; அழுகை வரதே!"

மூன்றாவது போலீஸ்காரன் சொன்னான்; "வழியாச் சொல்லிவிடு! குழந்தையைக் கழுத்தை முறிச்சுக் கையில் எடுத்துக்கிட்டு இங்கே வந்தே. இருட்டா இருந்தது; எந்தப் பக்கம் போனே? எத்தனை அடி நடந்தே? எங்கே குழி பறிச்சே?...... காட்டி விடு" என்று அதட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/121&oldid=1523753" இலிருந்து மீள்விக்கப்பட்டது