பக்கம்:ஆடரங்கு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஆடரங்கு


நடந்து கொண்டிருந்த போலீஸ் சோதனையைப்பற்றிப் பாடம் ஒப்பிக்கத் தொடங்கிவிட்டார். அவருக்குச் சந்தேகமில்லை- அந்தப் பெண்தான் குற்றவாளி என்பதைப்பற்றி. நாங்கள் ஏற்கனவே அறிந்துகொண் டிருந்ததையே அவர் சற்று விரிவாக அசுர பாவத்துடன் சொன்னார்.

அன்று அந்த ஹோட்டலில் காபி எங்களுக்கு ருசிக்கவில்லை.

நாங்கள் வீடு திரும்பும்போதும் ஆற்றுப்பால ஏற்றத்தில் அந்தச் சோதனை நடந்து கொண்டிருந்தது.

"உணவு உற்பத்தி அதிகரிக்க ஓர் இலாகா ஏற்பட்டிருக்கிறதே! அதன் சூழ்ச்சி இது ! அந்தத் திடல் பூராவும் இன்றிரவுக்குள் கொத்திவிடுவார்கள்" என்றார் நண்பர்களில் ஒருவர்.

ஆனால் அவரும் அதை ஹாஸ்யமாகச் சொல்லவில்லை; நாங்களும் அதை ஹாஸ்யமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

மறுநாள் நாங்கள் அதை மறந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒருவரும் அதுபற்றிப் பேசத் துணியவில்லை.

இது நடந்தது ஒரு வியாழக்கிழமை என்று சொன்னேனல்லவா?

அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாங்கள் காபி சாப்பிடப் போனபோது அந்த ஹோட்டல் முதலாளி தாமாகவே அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். "இரண்டு மூன்று நாள் முந்தி பாலமான் ஏற்றத்தில் அந்தப் பெண்..."

காபி சுட்டுவிட்டது போலஅவசர அவசரமாக டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, "என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"அந்தப் பெண்ணை விட்டு விட்டார்கள் " என்றார் ஹோட்டல் முதலாளி.

ஏன், என்ன ? என்று நாங்கள் யாரும் கேட்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/123&oldid=1523755" இலிருந்து மீள்விக்கப்பட்டது