பக்கம்:ஆடரங்கு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனை

119


ஹோட்டல் முதலாளி தாமாகவே சொன்னார். "திடலில் அவள் கொன்று புதைத்து விட்டதாகத் தேடிய அந்தக் குழந்தை அகப்பட்டுவிட்டது, அது உயிருடனேயே இருந்தது."

"விரோதத்தால் ஏற்பட்ட பொய்ப் புகாரோ?" என்றார் நண்பர்.

நான் கீழே வைத்த காபி டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டேன்.

ஹோட்டல் முதலாளியின் கவனத்தை அச்சமயம் வேறு ஏதோ கவர்ந்தது. அவர் அந்தக் கதையைப் பூராவும் சொல்லவில்லை. நாங்களும் மேலே விசாரிக்க ஆசைப்படவில்லை.

வீடு திரும்பும்போது அந்தச் சம்பவத்தைப் பற்றி எங்களுடைய மூன்று நாளைய மௌனம் கலைந்தது.

"அந்தப் பெண்ணின் உருவம் இன்னும் என் கண்முன் நிற்கிறது" என்றார் ஒரு நண்பர்.

"ஏதோ கிரேக்க சோசு நாடகங்களை எல்லாம் பற்றிக் கதைக்கிறார்களே; கொல்லாத ஒரு குழந்தையைக் கொன்றாய் என்று சொல்லி, எங்கே புதைத்தாய் காட்டு என்று...... அடாடா!” என்றார் இரண்டாவது நண்பர்.

"அந்தப் பெண் சம்பந்தப்படாத ஏதாவது ஒரு குழந்தை உடல் அன்று போலீஸ் சோதனையில் போலீஸார் கையில் அகப்பட்டிருந்தால்....!" என்றேன் நான்.

"அவ்வளவுதான்..." என்றார் என் நண்பர்.

நான் ஒன்றும் சொல்லாமல் இருந்ததைக் கண்டு, "எப்படி? என்றார் ஒரு நிமிஷம் கழித்து.

"என்ன சொல்வது என்றுதான் எனக்குத் தெரியவில்லை" என்றேன் நான்.

 

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/124&oldid=1523757" இலிருந்து மீள்விக்கப்பட்டது