பக்கம்:ஆடரங்கு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வாழ்க்கைப் பந்தயத்தில்

ராஜாவும் சிவசங்கரனும் முப்பது வருஷங்களாகச் சிநேகிதர்கள். அவர்கள் இருவரும் அந்தக் காலத்தில் ஒரு வகுப்பில் அல்ல, ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம். படிப்பிலும் ஒரு வகுப்பு வித்தியாசம். ராஜா பெரியவன் - ஆறாவது பாரத்தில் வாசித்துக்கொண் டிருந்தான். சிவசங்கரன் ஐந்தாவது பாரத்தில் வாசித்துக்கொண்டிருந்தான்.

பல வருஷங்களுக்குப் பிறகு அந்த நண்பர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுவதற்கு நிறையவே இருந்தன விஷயங்கள். முப்பது வருஷங்களில் அவர்கள் ஏழெட்டுத் தடவைகள் தான் சந்தித்திருப்பார்கள். கடைசியாகச் சந்தித்தது பத்து வருஷங்களுக்கு முன், 1940 வாக்கில், ஒருவருக்கு மற்றவருடைய க்ஷேமலாபங்கள் பொதுவாகத் தெரியும். பரஸ்பரம் நண்பர்கள் மூலமாக விசாரித்து அறிந்துகொள்வார்கள். கடிதம் எழுதிக்கொள்ளுகிற வழக்கம் மட்டும் கிடையாது. ஆனால் ஹிட்லர் யுத்தம் தொடங்கியதற்குப் பின் அவர்களுடைய தொடர்பு விட்டுப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு சென்றுவிட்ட வருஷங்களில் அவர்கள் பரஸ்பர நண்பர்களில் கூட யாரையும் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பேசுவதற்கு உண்மையிலேயே விஷயம் நிறையத் தான் இருந்தது. இளமைப் பருவத்து நினைவுகளுக்கு நடு வயதில்தான் - அதாவது நாற்பது வயது வரும்போதுதான்-சக்தி அதிகம் பிறப்பது போலத் தோன்றுகிறது. பலதரப்பட்ட சிந்தனைகளின் வேகம் மூண்டு மூண்டு அதிகப்படுவது அந்த நடு

வயதுக் காலத்தில்தான்.

க—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/134&oldid=1524970" இலிருந்து மீள்விக்கப்பட்டது