பக்கம்:ஆடரங்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிட்டுக் குருவி

9


இரண்டாக வாங்கிண்டு வாங்கோ! நானும் ஒரு குருவிக் குஞ்சைப் பிடித்து வளர்க்கப் போறேன் என்றாள் ராஜி.

ஆகா! முட்டைதான் மூன்றிருக்கிறதே ! எனக்கு மட்டும் ஒரு குருவி வேண்டாமோ!" என்று நான் பதில் அளித்து விட்டு வண்டியில் ஏறிக்கொண்டேன். இப்படியாக அந்தச் சிட்டுக் குருவிகள் பிறக்கு முன்னரே, அவற்றின் விதி எங்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

கும்பகோணத்தில் எனக்கு இரண்டொரு நாள்தான் அலுவல் இருந்தது. முடித்துக்கொண்டு திரும்பியபோது, நான் குருவிக் கூண்டு வாங்கி வரவில்லை. அப்படி நான் வாங்காமல் வந்ததற்கு இரண்டொரு காரணங்கள் உண்டு. முக்கியமாக, சரோஜாவும் ராஜியும் இந்த இரண்டொரு தினங்களில் குருவிகளை மறந்தே போயிருப்பார்கள்; குருவிக் குஞ்சுகள் தப்பியிருக்கும் என்று நான் எண்ணினேன். அப்படி அவர்கள் மறக்காமல் இருப்பார்களேயானால், பார்த்துக்கொள்ளலாம். குருவிக் கூண்டு வாங்குவதுபற்றி எனக்கு எவ்வித ஆட்சேபமும் கிடையாது. கூடியவரையில் சண்டை சச்சரவு இல்லாமலே வாழ்க்கை நடத்திவிட வேண்டுமென்பதுதான் என் லட்சியம். அதனால் நான் அநேகமாக எல்லா விஷயங்களிலுமே 'அவள் சொல்லுகிறபடியே நடந்துவிட முயலுவேன். சிட்டுக்குருவி விஷயத்தில் மட்டும் விதி விலக்குச் செய்வானேன்!

நான் குருவிக் கூண்டு வாங்கி வராததுபற்றிச் சரோஜாவுக்கும் ராஜிக்கும் வருத்தந்தான். ஆனால் சிட்டுக் குருவியின் கூட்டில் முட்டைகள் அப்படியே இருந்தன.

"குஞ்சு பொரிக்க இன்னும் இரண்டு வாரம் ஆகும் போல் இருக்கிறது!" என்றாள் ராஜி.


"அதற்கப்புறம் இரண்டு வாரமாகும், அவைகளுக்கு இறக்கை முளைத்துப் பறக்க ஆரம்பிக்க !” என்றேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/14&oldid=1525238" இலிருந்து மீள்விக்கப்பட்டது