பக்கம்:ஆடரங்கு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஆடரங்கு


"இப்போதெல்லாம் கூட்டமில்லாமல், சௌகரியமாகப் போகவேணுமானால் முதல் வகுப்பில்தான் போகவேணும் என்றார் வண்டியில் சௌகரியமாக உட்கார்ந்திருந்த ஒருவர்.

"தாங்க்ஸ்" என்று சொல்லிக்கொண்டே, இந்தப் புத்திமதி கூறிய மனிதர் யார் என்று திரும்பிப் பார்த்தேன்.எங்கேயோ பார்த்த முகமாகத்தான் தோன்றியது. ஆனால் எங்கே என்றுதான் என்னால் நிச்சயிக்க முடியவில்லை.

அவர் ஓர் ஆசனத்தில் கிட்டத்தட்டப் பாதி இடத்தை அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயசு நாற்பதுக்கும் அதிகமிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய நடை உடை பாவனைகள், அலங்காரங்கள் எல்லாம் பதினாறு வயசு தாண்டிய பையனுடைய மனோபாவத்தைக் காட்டியமாதிரியிருந்தன. அவருடைய சட்டை, கதர்ச் சட்டைதான். ஆனால் அதில் மாட்டியிருந்த பொத்தான்களெல்லாம் வைரப் பொத்தான்கள். வலது கையில் நவரத்தினங்கள் இழைத்த வீரச் சங்கிலி, இடது கையில் தங்கக் கைக்கடியாரம், தங்கச் சங்கிலியில் இணைத்துக் கட்டியிருந்தது; கை விரல்கள் பத்துக்குமாகப் பதினைந்து பதினாறு மோதிரங்கள். அவர் கையை அசைக்காமல் உட்கார்ந்திருக்கும்போதே பச்சையும் நீலமும், சிவப்புமாக டால் வீசின. கழுத்திலே ஏழெட்டுப் பவுனாவது இருக்கும், மைனர் செயின்; முகப்பிலே ஏழெட்டு வைரம். கறுப்பு நெற்றிப் பரப்பிலே பளீரிட்ட வெள்ளைச் சந்தனப் பொட்டு; அந்தப் பொட்டில் வைரம், தங்கம் ஏதாவது பதித்திருந்ததா என்பதை என்னால் நிச்சயிக்க முடியவில்லை கண்கூசிற்று. வாய்ப் பற்களிலும் கோடை இரவு வானத்தில் நட்சத்திரங்கள் போல் தங்கம் அங்கங்கே ஒளி வீசியது.

"வீட்டிலேயும், தன் ஆஸ்தியில் ஒரு பகுதியையாவது விட்டுவிட்டு வந்திருப்பார் இவர்; இல்லையா? என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

எதிர் ஆசனத்திலிருந்த ஒருவர் இதற்குள் எழுந்து எங்களுக்கு இடம் கொடுத்தார். நான் ஏதோ முணுமுணுத்ததற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/143&oldid=1527007" இலிருந்து மீள்விக்கப்பட்டது