பக்கம்:ஆடரங்கு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

ஆடரங்கு

ரைப் பார்த்து, "எக்ஸ்க்யூஸ்மீ ! எனக்குக் கொஞ்சம் இடம் தரேளா?" என்று கொஞ்சலாகக் கேட்டாள்.

நவரத்தின மனிதர் சற்றுப் பதட்டமாகவே நகர்ந்து இடம் கொடுத்தார். அவருக்கும் அந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையில் நாஸுக்காக ஸீட் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டாள் அந்தப் பெண். மற்றவர்களும் சற்றுப் பரபரப்புடனேயே நகர்ந்துகொண்டார்கள்.

சிதம்பரம் ஸ்டேஷனை விட்டு ரெயில் கிளம்பியது. ராஜி அந்த மாணவியை விட்டுக் கண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ராஜி கர்நாடகமாயிருப்பது பற்றி எனக்குச் சிறிதும் ஆக்ஷேபம் கிடையாது; சற்றுப் பெருமைகூட என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவள் பிறத்தியார் கவனிக்கும்படியாக நடந்துகொண்டு விடுவாள். காலேஜ் பெண்கள் என்கிற ஜாதியையே பார்க்காதவள்போல அவள் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது எனக்குப் பிடிக்கவில்லை.

"அவள் கவனத்தைத் திருப்புவதற்காக நான் சொன்னேன்: "அதோ தெரிகிறது பார், அதுதான் சிவபுரிக் கோயில்” என்று.

"அதுவா?" என்றாளே தவிர ராஜி, நான் சுட்டிக்காட்டிய பக்கம் பார்க்கவே இல்லை.

பாப்பா மட்டும் நான் காட்டிய கோபுரத்தைப் பார்த்தாள். பிறகு, "அவாத்து சரோஜா மாதிரி யிருக்கா அப்பா" என்றாள் உரக்க.

"இந்தாடி!" என்று பாப்பாவை அதட்டினாள் ராஜி.

"அம்மாவுக்குப் பெண்தானே " என்றேன் நான். பிறகு, "போக்கிரி!" என்று பாப்பாவை அதட்டினேன்.

ஆனால் என் அதட்டல் முழுக் கோப அதட்டல் அல்ல. அதில் கொஞ்சம் பெருமையும் கலந்திருந்தது. நாலு வயசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/145&oldid=1527030" இலிருந்து மீள்விக்கப்பட்டது