பக்கம்:ஆடரங்கு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாத ஸரம்

141

நிரம்பாத இந்தக் குழந்தைதான் எத்தனை விஷயங்களைக் கவனித்து மனசில் வைத்துக்கொண்டிருந்தாள்!

சிதம்பரத்தில் நாங்கள் குடியிருந்த தெருவில் ஒரு மாசத்துக்கு முன், எங்கள் வீட்டுக்கு நாலைந்து வீடுகள் கிழக்கே ஒரு வீட்டில் புதுசாக ஒரு குடும்பம் வந்து குடியேறியது. அந்தக் குடும்பத்தின் நடையுடை பாவனைகள், போக்குவரத்து எல்லாம் ஒரு தினுசாக இருப்பதாகத் தெருவார் சில காலம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு நிச்சயமாகிவிட்டது. அந்தக் குடும்பத்துப் பெண்கள் உலகத்தின் மிகவும் பழமையான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் என்பது தெளிவாகிவிட்டது. அந்தக் குடும்பத்தின் இன்றைய, 'பொருளாதார நம்பிக்கை'தான் பாப்பா சொன்ன சரோஜா.

பாவம்! பாப்பாவுக்கு என்ன தெரியும்? இந்த மாதிரி விஷயங்களில் யார் காதிலும் விழும்படியாக எதுவும் பேசக்கூடாது. என்று! ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த சரோஜாவைப் பற்றிப் பாப்பா பேசினாலும் பாதகமில்லைதான். எங்கள் தெரு சரோஜாவைப்பற்றி அந்தக் காலேஜ் மாணவிக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது?

ஆனால் தெரிந்திருந்தால்தான் என்ன? இந்த நாட்களில் அதையெல்லாம் படித்தவர்கள் பொருட்படுத்துவதுதான் கிடையாதே.

ரெயில் வல்லம்படுகையில் நிற்காமல் வேகமாகவே சென்றது. "சின்ன ஸ்டேஷனிலெல்லாம் இந்த வண்டி நிற்காது" என்றேன் நான், என் மனைவியின் கவனத்தைச் சற்றுத் திருப்புவதற்காக.

"அப்படியானால் மாயவரம் சீக்கிரமே வந்துவிடும்" என்றாள் ராஜி. அவள் குரலில் வருத்தம் தொனித்தது.

நவரத்தின ஆசாமி ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணைக் கேட்டார். "அண்ணாமலைச் சர்வகலாசாலையில் படிக்கிறேளா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/146&oldid=1527031" இலிருந்து மீள்விக்கப்பட்டது