பக்கம்:ஆடரங்கு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாத ஸரம்

145


"மறதி என்பது சௌகரியமாக இருக்கிறது சில சமயம்" என்று கூறி நகைத்தார் அவர். பிறகு சென்னையைவிட்டுப் போக இருந்த ஒரு தமிழறிஞருக்கு நடந்த ஒரு விருந்தில் என்னைச் சந்தித்திருப்பதாக அவர் ஒரு குறிப்பாகச் சொன்னார். எனக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. அவரை அறிந்துகொள்ளாதது பிசகுதான்.

"என்னை மன்னிக்கவேணும்" என்றேன். "நாராயண செட்டியாரை நான் உடனே தெரிந்துகொள்ளாதது என்மேல் பிசகுதான்" என்றேன்.

இப்பவாவது ஞாபகம் வந்ததே?" என்றார் நாராயண செட்டியார்

உண்மையிலேயே நாராயண செட்டியார் பெரிய மனிதர்தான். நவகோடியில்லாவிட்டாலும் நல்ல சொத்துள்ளவர். கலையிலும் நல்ல ஈடுபாடுள்ளவர்.. கலையை விட அதிகமாகக் கலைஞர்களிடம் ஈடுபாடுள்ளவர். கலைஞர்களிலும், பெண் கலைஞர்களிடத்து நிரம்ப அன்புள்ளவர் என்பது அவரைப் பற்றிய பிரசித்தமான ரகசியம். சமீபத்தில் கூட அவர் பெயர் பத்திரிகைகளில் நிறைய அடிபட்டது; ஒரு ஜீவனாம்ச வழக்கு விஷயத்தில்.

வைத்தீசுவரன் கோயில் கோபுர தரிசனமாயிற்று, ரெயிலிலிருந்தபடியே. என்னையும் அந்தக் காலேஜ் மாணவியையும் தவிர அந்த வண்டியிலிருந்த மற்றவர்களெல்லோரும் கைவிரல்களால் தங்கள் கன்னங்களைத் தொட்டுக்கொண்டு, வைத்தியநாத சுவாமியிடம் தங்களுக்குள்ள பக்தியை வெளியிட்டுக் கொண்டார்கள்.

ரெயில் வைத்தீசுவரன் கோயிலில் நின்றுவிட்டுக் கிளம்பிய பிறகுதான் நான் கவனித்தேன். அந்தக் காலேஜ் மாணவி நாராயண செட்டியார் பெயரைக் கேள்விப்பட்டதிலிருந்து ஒரு மாறுதல் அடைந்திருந்த மாதிரி தோன்றிற்று எனக்கு. என்ன மாறுதல்? எப்படி மாறுதல்? ஏன் மாறுதல்? எனக்குப்

புரியவில்லை.

க—10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/150&oldid=1527035" இலிருந்து மீள்விக்கப்பட்டது