பக்கம்:ஆடரங்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிட்டுக் குருவி

11

வேண்டும்; அது சர்வகலாசாலையார் தாமாகவே தெரிந்து கொண்டு மனமுவந்து செய்ய வேண்டியது; நான் சொல்லிக் கொள்ளக் கூடாதுதான்; எனினும் சொல்லி வைத்தேன். ஆனால், ஒன்று: நான் அப்படி அறிந்துகொண்டதில் எதெது சரி தப்பு என்று அப்பொழுதோ பின்னரோ விசாரிக்கப் புகவில்லை. அது வியர்த்தமான ஆராய்ச்சியாகி விடும். தவிரவும், சிறந்த சர்வகலாசாலைகளில்தான் ஆகட்டும்: மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டது சரியா தப்பா என்று யோசிக்கத் துணிகிற துண்டா என்ன?

மூன்று முட்டைகளிலிருந்து இரண்டே இரண்டு குஞ்சுகள் தாம் வெளிவந்தன. மூன்றாவது முட்டை என்ன ஆயிற்று என்று எங்களில் யாருக்கும் - ராஜிக்கும் கூடத்தான் - தெரிய வில்லை. "நாய் பூனை மாதிரி தன் குஞ்சுகளில் ஒன்றைச் சிட்டுக் குருவியும் தின்றிருக்கும் ” என்றாள் ராஜி.

“நாய் பூனை மாதிரி சிட்டுக்குருவி மாமிசபட்சிணி இல்லையே ” என்று நான் ஆட்சேபித்தேன்.

"அப்படியானால் மூணாவது குஞ்சு என்ன ஆச்சு? நீங்களே சொல்லுங்களேன்" என்று ராஜி சவால் விடுத்தாள்.

நான் மௌனம் சாதித்தேன்.

கொல்லையில் கூட்டில் குருவிக் குஞ்சுகள் பிறந்த அன்றே சரோஜா ஊருக்குப் போக நேர்ந்துவிட்டது. அவள் பாட்டி பட்டணத்திலிருந்து வந்திருந்தாள். காவேரிக் கரையில் ஒரு கிராமத்துக்குப் போக இருந்தாள். பேத்தியையும் அழைத்துக் கொண்டு போய்த் தன்னுடன் சில நாள் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

சரோஜா முதலில் கிளம்ப மறுத்தாள். "என் சிட்டுக் குருவியை விட்டுட்டு நான் வரமாட்டேன் போ என்றாள். "நான் வர மாட்டேன். நீ இப்பவே ஸ்டேஷனுக்குப் போய் விடு, பாட்டி' என்று பாட்டியை விரட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/16&oldid=1525240" இலிருந்து மீள்விக்கப்பட்டது