பக்கம்:ஆடரங்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஆடரங்கு


"நான் குடித்தனம் பண்ற அழகுக்கு என்ன வந்தது இப்போ ! அப்படிச் சொம்பு போனாத்தான் என்ன? எங்கம்மா வாங்கிக் கொடுத்ததுதானே ! நீங்க சம்பாதிச்சு வாங்கிக் கொடுத்தது என்ன கெட்டுப்போச்சு?" என்றாள். இது பாய்ச்சலின் முன் பதுங்கல்.

"வாசல்லே யாரோ கூப்பிடறப்போல இருக்கே" என்று நான் அங்கிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றேன்.

"நீங்க சம்பாதிச்சுப் போடற அழகுக்கு நான் குடித்தனம் பண்ற அழகு ஒண்ணும் கெட்டுப் போயிடல்லை.ஆறு மாசத்துக்கொருதரம் ஏதாவதொரு பத்திரிகையிலே ஒரு கதையை எழுதிவிட்டு, வருஷத்தில் மற்ற ஆறு மாசமும் அதைப்பற்றிப் பெருமை அடிச்சுக்கொண் டிருந்தால் சரியாப் போச்சா ! கதைக்கு வள்ளிசா ஒன்பதே முக்காலே அரைக்கால் ரூபா வந்துவிடும். அதை வச்சிண்டு ஜோரா ஒரு வருஷம் குடித் தனம்பண்ணவேண்டியதுதான், குடித்தனம்! என் குடித்தனம் கெட்டுப் போச்சாமே !...ம்...

நான் பேச்சை ஹாஸ்ய பாவத்துக்குத் திருப்பப் பார்த்தேன்: கதைக்குச் சம்மானம் மணியார்டராக அனுப்பினால் தான் ஒன்பதே முக்காலே அரைக்கால் வரும். இப்போ செக் கான்னா எல்லாரும் அனுப்பிச்சுவிடறான் ; கால் ரூபாய் கமிஷன் போயிடறது" என்று சொல்லிச் சிரித்தேன்.

"சிரிப்பு வேறு வேண்டிக் கிடக்கில்லையா ?” என்று ராஜி சினந்துகொண்டாள். " அதுக்குள்ளேயே இலையை எடுத்துப் போட்டுண்டு என் பிராணனை வாங்காதேங்கோ. ஒரு மணி நேரம் கழித்து வாங்கோ. ரசம் இனிமேல்தான் ஆகணும்... நான் குடித்தனம் பண்ற அழகு பிடிக்கல்லையாமே !"

"ரசம் வைக்க ஒரு மணி நேரமா ஆகும்? என்று அசட்டுத்தனமாக, என்ன கேட்கிறோம் என்று பசிவேகத்தில் அறியாமல் கேட்டுவிட்டேன்.

அவ்வளவுதான். என் குற்றங் குறைகள் எல்லாம், சரமாரியாக என் மேல் விசிறப்பட்டன. நல்ல வேளையாக அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/19&oldid=1525243" இலிருந்து மீள்விக்கப்பட்டது