பக்கம்:ஆடரங்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஆடரங்கு


கதா நாயகர்களுக்கு ரொம்பவும் பொருந்தும் என்று நான் எண்ணுகிறேன்.) சிறகுகள் வளர்ந்து பறக்கத் துடித்துக் கொண்டிருந்தன.

அச்சமயம் ஒரு நாள் இரவு காற்றும் மழையும் பலமாக அடித்தது. இரவு மூன்று மணி இருக்கும். சத்தத்தைக் கேட்டு விழித்துக்கொண்ட போர்வையை இழுத்து மூடியபடியே சொன்னாள்: " பாவம்! கொல்லையிலே கூட்டில் குருவிக் குஞ்சுகள் இந்தக் காத்திலும் மழையிலும் குனிரிலும் என்ன பாடுபடுகின்றனவோ!"


"நான் போய்ப் பார்த்துவிட்டு வரட்டுமா?" என்றேன் நான், என் போர்வைக்குள் ளிருந்து.

ராஜீக்குத் தூக்கக் கலக்கம். பதில் சொல்லவில்லை.

மறுநாள் காலையில் எழுந்து கொல்லைப் பக்கம் போய்ப் பார்த்தபோது, குருவியின் கூடு மழையில் நைந்து அறுந்து கீழே கிடந்தது-திட்டுத் திட்டாகத் தேங்கியிருந்த ஜலத்தில், மூச்சுக் காட்டாமல் கூட்டில் குஞ்சுகள் ஒண்டிக்கொண் டிருந்தன.

கூட்டோடு அவற்றைத் தூக்கிக் கொண்டுவந்து கொல்லைத் தாழ்வாரத்தில் உலர்ந்திருந்த இடத்தில் போட்டேன்.

"ஐயோ பாவமே!” என்று அளவுகடந்த அநுதாபத்துடன் சொல்லிக்கொண்டு வந்து ராஜீ தாழ்வாரத்தில் உட்கார்ந்துகொண்டாள். அவனால் அந்தக் குஞ்சுகளை விட்டுக் கண்ணை எடுக்கலே முடியவில்லை.

வெயில் காய ஆரம்பித்ததும் வழக்கம்போலத் தாய்க் குருவி தன் குஞ்சுகளைத் தேடிக்கொண்டு வந்தது போலும். வழக்கமான இடத்தில் கூட்டையோ குஞ்சுகளையோ காணாமல், அது உடனே கூச்சலீட ஆரம்பித்து விட்டது. அந்தச் சிறு குருவியின் குரல் தெருவை நிரப்பி அதற்கப்பாலும் பரவி நின்றது. ஊர் முழுவதுமே, என் உலகம் முழுவதுமே, அதற் கப்பாலுமே, அந்தத் தாயின் சோகக் ரூரல் எட்டும் என்று எனக்குத் தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/21&oldid=1525249" இலிருந்து மீள்விக்கப்பட்டது