பக்கம்:ஆடரங்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஆடரங்கு


பக்கம் போனால் 'கச முச' வென்று பல பறவைகளின் குரல்கள் ஒலித்தன.

"அவை யெல்லாமாகச் சேர்ந்துகொண்டு நம்மைச் சபிக்கின்றன' என்றாள் ராஜி.

இரவு, குருவிக் குஞ்சுகள் பூனை கையில் அகப்படாமல் இருக்க வேண்டுமே என்று என் படுக்கைக்கருகில் தலைமாட்டிலேயே வைத்துக்கொண்டு படுத்திருந்தேன். ராஜிக்கோ எனக்கோ சரியான தூக்கமில்லை. அவள் ஏதோ சொப்பனங் கண்டு பிதற்றிக்கொண் டிருந்தாள். கண்ணை மூடினால் போதும்: காதிலே லட்சக் கணக்கான பறவைகளின் குரல் ஒலிக்கத் தொடங்கிற்று.

விடியற் காலையிலேயே எழுந்து குருவிக் குஞ்சுகளை அவரைப் பந்தலின் கீழே கொண்டுபோய் விட்டுவிட்டேன். அவை சோர்ந்து போனவைபோல் ஒன்றோடென்று ஒண்டிக்கொண்டு கிடந்தன. நான் அவற்றை விட்டு நகர்ந்தவுடன் முருங்கை மரக் கிளையிலிருந்து தாய்க் குருவி பறந்து வந்து அவற்றண்டை உட்கார்ந்துகொண்டது. குஞ்சுகளும் சோர்வு நீங்கி மெல்லிய குரலில் கிறீச்சிடலாயின.

தூங்கி எழுந்து வந்த ராஜியிடம் நான் குருவிகளை விட்டு விட்ட விஷயத்தைச் சொன்னேன்.

"விட்டு விட்டேளா?" என்று சற்று வருத்தத்துட னேயே அவள் கேட்டாள்.

அரை மணி நேரம் கழித்துக் கொல்லைப் பக்கம் போய்ப் பார்த்தபோது, குருவியையோ குருவிக் குஞ்சுகளையோ அங்கே காணவில்லை.

அதோ அடுத்தாத்துப் பாகல் பந்தலிலே இருக்கு, நம்மாத்துக் குருவி'" என்று ராஜி காட்டினாள்.

"நம்மாத்துக் குருவியா?" என்று சொல்லிச் சிரித்தேன் நான்.

என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கிய போல் இருந்தது. ஆனால் ராஜிக்கு மட்டும் வருத்தந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/23&oldid=1525252" இலிருந்து மீள்விக்கப்பட்டது