பக்கம்:ஆடரங்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஆடரங்கு

ஒருங்கே தைரியம் பிறப்பதற்காகச் சொல்லிக்கொண்டேயிருந்தான்.

ணவன் ஆபீஸுக்குப் போன பிறகு, லக்ஷ்மி பூஜை அலமாரிக்கெதிரில் புஷ்பம் வைத்துப் பார்த்தாள். கடவுளே ஆப்பரேஷன் செய்துகொள்ளலாம் என்று சொல்வது போலத்தான் இருந்தது. ஆனால் அதிலும் அவளுக்குப் பரிபூரணமான நம்பிக்கை வரவில்லை. சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல அவள் பூ நூல் போட உட்கார்ந்தாள். அதில் அவள் மனம் செல்லவில்லை. ஏதோ புஸ்தகத்தைப் பிரித்துக்கொண்டு உட்கார்ந்து பார்த்தாள்; அதிலும் மனம் செல்லவில்லை. ஓர் ஏடு புரட்ட ஒரு மணி நேரம் ஆயிற்று, சாரமில்லை என்று புஸ்தகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு முன் வராந்தாவில் போய் நின்றுகொண்டு தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றாள். தெருவில் குறுக்கும் நெடுக்குமாக எத்தனை குழந்தைகள் ஓடியாடித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன? அவற்றை எல்லாம் அவரவர்களின் தாய்மார்கள் ஆப்பரேஷன் செய்துகொண்ட பின்னரா பெற்றெடுத்தார்கள் என்று அவள் தன்னையே கேட்டுக்கொண்டாள். தான் மட்டும் ஆப்பரேஷன் செய்துகொண்டால்தான் ஆகும் என்று தனக்கு நேர்ந்திருந்த விதியை எண்ணி நொந்துகொண்டாள்.

எப்படியோ அன்றைப் பொழுது கழிந்துகொண்டிருந்தது.

மத்தியான்னம் கீழ்த்தளத்தில் குடியிருப்பவர்களின் பெண் சாலு பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பியதும் " மாமி "யைத் தேடிக்கொண்டு மாடிக்கு வந்தாள். அவள் மாமியைக் கண்டவுடன், " ஏன் மாமி இன்னிக்கி என்னமோ போல இருக்கையே ? " என்று தன் கொச்சை மொழிகளால் கேட்டாள். அவளைக் கண்டவுடனேயே லக்ஷ்மியின் ' என்னமோபோல இருக்கும் தன்மை ' எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டுவிட்டது. ஆனால் கால் மணி நேரத்தில் சாலு பள்ளிக்கூடம் போக அவளை விட்டுக் கிளம்பியபின், அந்த ' என்னமோபோல் இருக்கும் தன்மை '-சூனியம்- மறுபடியும் வந்து அவளைச் குழ்ந்து கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/29&oldid=1528088" இலிருந்து மீள்விக்கப்பட்டது