பக்கம்:ஆடரங்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஆடரங்கு

அவனுக்கும் வேடிக்கையாகத்தான் இருந்தது ; சிரிப்பு வந்தது. பொம்மையை வாங்கிக் கையில் எடுத்துக்கொண்டே லஷ்மி, " சாலுவுக்காக வாங்கினேன் " என்றாள். அதற்குப் பிறகு அவள், சாலுவுக்காக ஒரு சாக்கலேட் பொட்டலமும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள். வண்டியில் வழி நெடுகத் தாங்கள் பார்த்த படத்தைப் பற்றியே இருவரும் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவருடைய மனசிலும் வேறு ஏதோ ஒரு விஷயந்தான் முன் நின்றது. ஆனால் ஒருவரும் அதைப்பற்றி மனம் விண்டு பேசவில்லை.

வீடு வந்து சேர்ந்தவுடன், விளக்கைப் போட்டுவிட்டுச் சாலுவுக்காகத் தான் வாங்கிக்கொண்டு வந்த சாமான்களை அவளிடம் கொடுப்பதற்காக லஷ்மி, " சாலு ! சாலு ? " என்று மாடியில் இருந்தபடியே கூப்பிட்டாள். பதில் இல்லை. கீழ்த்தளத்து முற்றத்துப் படிக்கட்டில் இறங்கி நின்று கொண்டு லக்ஷ்மி சாலுவை மறுபடியும் கூப்பீட்டாள். அதற்கும் பதில் இல்லை. சற்று உரக்கவே, " சாலு ! சாலு ! ” என்றாள்.

" அர்த்த ராத்திரியிலே என்ன சாலு வேண்டிக் கிடக்கு ?" என்று கீழேயிருந்து ஒரு பெண் குரல் மெதுவாக, ஆனால், லஷ்மியின் காதிலும் விழும்படியாகக் கேட்டது. பிறகு சற்று உரக்க, " சாலு தூங்கிப் போய்விட்டாளே ! " என்றது. அதே சமயம், " ஏன், மாமி ? " என்று சாலுவின் குரல் எழுந்ததும், உடனே அது பலவந்தமாக அடங்கியதும் தெரிந்தது.

சற்று நேரம் திகைத்துப் போய், லக்ஷ்மி படிக்கட்டிலேயே நின்றாள். அவளுக்குச் சற்று முன் பதில் சொன்ன அதே பெண் குரல் சற்று மெதுவாகவே வேறு யாரிடமோ, " மாடியிலே குடியிருக்கிற அந்தக் குழந்தையில்லாத பெண்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/31&oldid=1528091" இலிருந்து மீள்விக்கப்பட்டது