பக்கம்:ஆடரங்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனமாற்றம்

27

என்று சொல்ல ஆரம்பித்தது அவள் காதில் விழுந்தது. அதற்குமேல் அவள் என்ன சொன்னாள் என்று கேட்க லஷ்மி பிரியப் படவில்லை. தடதடவென்று படியேறி மாடிக்குப் போய் விட்டாள். கையில் வைத்திருந்த அந்த அழகிய செலுலாயிடுப் பொம்மையையும். ' மணமும் குணமும் முந்திரிப் பருப்பும்- நிறைந்த ' சாக்கலேட்டையும் ஆத்திரத்துடன் கை கொண்ட மட்டும் வீடு ஒரு மூலையில் எறிந்துவிட்டாள். சாக்கலேட்டுப் பொட்டலம் உருத் தெரியாமல் நசுங்கிப்போயிற்று. ஒரு பாவமும் அறியாத செலுலாயீடுக் ' குழந்தை ' திருப்பிய கழுத்துத் திருப்பிய படியே, விழித்த கண் விழித்து நிலைத்தபடியே தனக்கு இருந்த சொல்ப சக்திகளையும் இழந்துவிட்டுப் பரிதாபகரமாக மல்லாந்து விழுந்து கிடந்தது.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் எதுவுமே சொல்லாமல் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தான்.

சாப்பாடெல்லாம் முடிந்ததும். சமையலறைக் காரியங்களை எல்லாம் அவசர அவசரமாக முடித்துக்கொண்டு. லக்ஷ்மி சீனிவாசனின் நாற்காலியண்டை வந்து நின்றாள்.

“என்ன?" என்றான் சீனிவாசன்,

"வெற்றிலை போட்டுக்கொள்ளுங்கள் " என்று வெற்றிலை எடுத்துச் சுண்ணாம்பு தடவிக் கிழித்துக் கொடுத்தாள் லக்ஷ்மி. பின்னர் ஒரு விநாடி தயங்கி விட்டுச் சொன்னாள்: "டாக்டரிடம் சொல்லிவிடுங்கள். முடியுமானால் நாளைக்கே ஆப்பரேஷன் செய்துவிடட்டும்.”

சீனிவாசன் புன்சிரிப்புடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ; "எல்லாம் ஏற்கனவே சொல்லி ஏற்பாடாகி விட்டது. காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் ஆஜராகிவிட வேண்டியதுதான் பாக்கி" என்றான். லஷ்மியின் உடம்பு விதிர்த்தது; ஆனால் முகம் புன்முறுவல் பூத்தது.



 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/32&oldid=1528092" இலிருந்து மீள்விக்கப்பட்டது