பக்கம்:ஆடரங்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஆடரங்கு

“உனக்காக எழுதுகிறேன் பார். ஒரே ஒரு கதை எழுதுகிறேன். அதை எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பமாட்டேன். உனக்காக எழுதுகிறேன் ” என்றான் சுவாமிநாதன்.

ஆனால் காமுவுக்காகக் கூட அவனும் கதை எழுத முடியவில்லை.

3

தோ விளையாட்டாகத்தான் காமு கதை எழுத உட்கார்ந்தாள், ஆனால் அது வினையாகவே அவளைப் பற்றிக்கொண்டது. வீட்டு வேலை, குமாஸ்தாக்களின் மனைவிமார் சமூகத்தில் உரிய ஸ்தானம், குழந்தைகள், கணவர்—இவ்வளவு கடமைகளுடன் எழுதுவதும் ஒரு கடமையாக அவளைப் பிடித்துக்கொண்டது. ஆரம்பத்தில் ஆத்ம திருப்தியை மட்டும் உத்தேசித்து எழுதினாள். இரண்டொன்று எழுதி, எழுத்துப் படிந்தவுடன் ஏதாவது புனைபெயருடன் பத்திரிகைகளுக்கும் அனுப்பிப் பார்க்கலாமே என்று ஆசை தட்டிற்று.

தன்னுடைய உண்மையான உணர்ச்சிகளை எல்லாம் உள்ளபடியே விவரித்து அவள் கதை எழுதினாள். இலக்கியாசிரியன் கடைசியில் குமாஸ்தாவான கதையைத் தனக்கு எட்டியவரையில் எழுதி அதற்கு, ‘ இலக்கியாசிரியனின் மனைவி ’ என்று மகுடமிட்டு, ‘ குமாரி ’ என்ற புனைபெயருடன் அனுப்பினாள்.

அவள் கதை எழுதியதோ, அதைப் பத்திரிகைக்கு அனுப்பியதோ அவன் கணவனுக்குத் தெரியாது. நல்ல வேளையாக கதை வெளியான இதழ் ‘ ஜயந்தியை ’யும் அதற்குச் சம்மானமாக வந்த ரூபாய் இருபத்தைந்து மணியார்டரையும் தபால்காரன் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தபோது அவள் கணவன் ஆபீசுக்குப் போயிருந்தான்; வீட்டில் இல்லை. அந்த இதழை அவன் கண்ணிலே காட்டாமல் தன் பெட்டிக்குள் போட்டுப் பத்திரப்படுத்திவிட்டாள்.

ஆனால் அந்தப் பத்திரிகை ‘ தமிழர் கிளப்பு ’க்கு வந்திருந்தது. அதில் சுவாமிநாதன் அந்தக் கதையைப் படித்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/39&oldid=1527499" இலிருந்து மீள்விக்கப்பட்டது