பக்கம்:ஆடரங்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியாசிரியனின் மனைவி

37

‘ஜயந்தி’யின் வாசகர்களே ' ஓட்டுக் ' கொடுத்துச் சொல்வது வழக்கம். அந்தப்படியே அந்த வருஷமும் வாசகர்களின் அபிப்பிராயம் கோரப்பட்டது. அவ் வருஷத்திய ஐயந்தி இதழ்களில் வெளிவந்த கதைகளில் ‘குமாரி’ எழுதிய ' இலக்கியாசிரியனின் மனைவி ' என்ற கதைதான் சிறந்தது என்று ' ஜயந்தி ' வாசகர்களில் நூற்றுக்கு எண்பது பேர் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள். அவ்வருஷத்திய ' ஜயந்தி 'ப் பரிசு ' குமாரி ’ என்பவளுக்கு வழங்கப்படும் என்று ஆசிரியர் அறிவித்திருந்தார். அத்துடன் ' குமாரி ' என்பவரின் உண்மைப் பெயரும் விலாசமும் வெளியிடப்பட்டிருந்தன.

அந்த இதழ் டில்லிக்கு வந்து சேர்ந்த அன்று சுவாமிநாதன் ' கிளப்பு 'க்குப் போகவில்லை. ஆகவே அவனுக்குத் தகவல் தெரியாது. இரவில் அவனை அகஸ்மாத்தாகச் சந்தித்த நண்பன் ஒருவன்தான் விஷயத்தைச் சுவாமிநாதனுக்குச் சொன்னான். அவன் திடுக்கிட்டுப் போனான். அவன் எதிர்பார்க்காத விஷயம் அது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஒன்றும் அறியாதவன்போல அவன் காமுவுடன் சிறிது நேரம் பேசிக்கொண் டிருந்தான். ஆனால் தெரிந்ததை அதிக நேரம் அடக்கி வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. நேராகவே கேட்டுவிட்டான்.

' குமாரி' என்பது நீதானாமே? ' ஜயந்தி 'யிலே " உன் பெயரும் விலாசமும் போட்டிருக்கிறதாமே !" என்றான்.

பதில் என்ன சொல்வது என்று அறியாமல் தடுமாறினாள் காமு. பல வருஷங்களுக்கு முன் தான் தன் கணவனிடம் சொல்லியதெல்லாம் அவளுக்கு ஞாபகம் வந்தது. தான் சற்றுக் கடுமையாகவே அப்போது பேசினதாக அவளுக்கு ஞாபகம். அவள் கண்கள் நிறைந்துவிடும்போல் இருந்தது. அழுகையை ஒருவாறு அடக்கிக்கொண்டு சொன்னாள், “சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள்தான் எழுதவே மாட்டேன் என்றீர்கள். நானாவது எழுத வருகிறதா பார்க்கலாமே என்று ஆரம்பித்தேன்” என்றாள்.

மாஜி இலக்கியாசிரியன் பதில் சொல்ல வில்லை, சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/42&oldid=1527145" இலிருந்து மீள்விக்கப்பட்டது