பக்கம்:ஆடரங்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஆடரங்கு


காமு சொன்னாள்: "எல்லாம் உங்கள் ஆசீர்வாதந்தான்."

அவள் வேறு என்னவெல்லாமோ சொல்ல விரும்பினாள். ஆனால் அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.

" இவ்வளவு கெட்டிக்கார மனைவி எனக்கு இருப்பது எனக்கே இன்றைக்குத்தான் தெரியவந்தது ! " என்றான் சுவாமிநாதன். அவன் என்ன சொல்வானோ என்று பயந்திருந்த காமு அவன் குரலில் தொனித்த பெருமையைக் கண்டு திக்பிரமை அடைந்தாள்.

அன்றிரவு வெகு நேரம் வரையில் இருவரும் தூங்கவில்லை. பழைய காலத்திய, அதாவது சுவாமிநாதன் இலக்கியாசிரியனாக இருந்த நாட்களைப் பற்றிய பேச்சில் ஈடுபட்டு வெகு நேரம் கண் விழித்திருந்தார்கள்.

மறுநாள் காலையில் சுவாமிநாதன் சாப்பிட்டு விட்டுக் கோட்டை மாட்டிக்கொண்டு ஆபீசுக்குக் கிளம்பும்போது, அவனுக்கு வெற்றிலை கிழித்துக் கொடுத்துக்கொண்டே, காமு சொன்னாள் : " குமாஸ்தாதான் என்றாலும் இலக்கியாசிரியையின் கணவன் என்பதை மறந்து விடாதீர்கள்! கன்னா பின்னா என்று யாராவது நண்பர்களிடம் ஆத்துக்காரியைப் பற்றிப் பிதற்ற ஆரம்பித்து விடாதீர்கள் ! " என்று எச்சரிக்கை செய்தாள்.

" போடி, போக்கிரி!" என்றான் சுவாமிநாதன். அவனுக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.



 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/43&oldid=1527134" இலிருந்து மீள்விக்கப்பட்டது