பக்கம்:ஆடரங்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஆடரங்கு

சான சிந்தனைகள் அவர் மனசில் புகுந்து குழப்பின. ஓடிக் கொண்டிருந்த எஞ்ஜினைத் திடுதிப்பென்று பிரேக் போட்டு நிறுத்தியது போன்றதோர் உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று. உடம்பையும் மனசையும் என்னவோ செய்தது.

பொழுது எப்பொழுது விடியும் என்று அவர் தம்மையே கேட்டுக்கொண்டார். ' விடியுமா, விடிந்து விடாதா ' என்றிருந்தது அவருக்கு.

தம்மை அறியாமலே சற்றுக் கண் அயர்ந்துவிட்டார். மணி மூன்றடித்தது தெரியாது. ஆனால், நாலடிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே விழிப்புக் கொடுத்துவிட்டது. நாலடிக்கும் வரையில், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே யிருந்தார். பிறகு, இனியும் படுத்திருப்பதில் சாரமில்லை என்று எழுந்து, தாம் அப்போது குடியிருந்த வீட்டில் மாடி வெளி வராந்தாவில் ஓர் ஈஸிச்சேரைக் கொண்டுபோய்ப் போட்டுக்கொண்டு, "அப்பாடா!" என்று அதில் சாய்ந்தார்.

வீட்டில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக்கொண் டிருந்தார்கள். வேலைக்காரர்கள் நிஷ்கவலையாகத் தூங்கினார்கள். எந்தப் பட்டணம் எப்படிக் கொள்ளைபோனால்தான் அவர்களுக்கென்ன? ராவ்பகதூரின் சொந்தக்காரர்கள்-இருந்தவர்கள் ஒரு சிலர்-முந்திய தினம் அவருடன் ஓடியாடி உழைத்தவர்கள் ; அவர்களுக்கு அந்த அலுப்பு! தவிரவும் பொழுது விடிந்தால், மறுபடியும் பூராத் திட்டம் வேலையிருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தூங்காமல் என்ன செய்வார்கள் ?

ஈஸிச்சேரில் சாய்ந்தபடியே, எதிரே நோக்கினார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர். இப்போது அவர் குடியிருந்த இந்தச் சிறு வீட்டுக்கு எதிரேதான் இருந்தது அவர் புதிசாகக் கட்டியிருந்த பங்களா. இருளில் பங்களாத் தெரியவில்லை ; தவிரவும், அதைச் சுற்றிலும் அடர்ந்த தென்னந் தோப்பு இருந்தது. ஒரு விதத்தில் சென்னையில் சிறந்த மயிலாப்பூரில் சிறந்த இடம் அது என்றே சொல்ல வேண்டும். பெருமையுடன் இருளில் எதிரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/45&oldid=1527135" இலிருந்து மீள்விக்கப்பட்டது