பக்கம்:ஆடரங்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஆடரங்கு

அந்த ஆசை நிறைவேறும் காலம் வந்து விடும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், அவர் ஆசை நிறைவேறும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொழுது விடிந்தால் கிரகப் பிரவேசம். ராவ்பகதூர் நரசிம்ம ஐயர், மறுநாள் தம் சொந்த வீட்டில் குடிபுகுந்து விடுவார்.

தனது என்று ஒரு வீடு இல்லாதவனுக்குத்தான் இந்த ஆசையின் முழுவேகமும், இந்தச் சிந்தனையின் கொந்தளிப்பும் தெரியமுடியும். ஆயுள் பூராவும் வாடகை வீடுகளிலேயே குடியிருந்து விட்டு, இறந்த பின்பும் மயானத்தில் எட்டு மணி நேரத்துக்கு ஆறடி நிலத்தைக் குத்தகை எடுத்துக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வெளியேறும் பிரக்ருதிகளின் மனம் எப்படிப்பட்டது என்று யாருக்கும்-ஏன், அவர்களுக்கே சரியாகத் தெரியாது. எவனாவது புது வீடு கட்டிக் கிரகப் பிரவேசம் செய்கிறான் என்று கேள்விப்பட்டால், அவர்கள் மனசு பொங்கும்; வயிறு எரியும். வீடு கட்டிக் கிரகப் பிரவேசம் செய்கிறவர்கள், இந்த விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவேதான் இருக்க வேண்டும். வீடில்லாதவர்களைத் தங்கள் கிரகப் பிரவேச மகோத்ஸவத்துக்கு அழைக்காதிருப்பதே நல்லது.

ராவ்பகதூர் நரசிம்ம ஐயரின் கிரகப் பிரவேசத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். அநேகமாக அவர்கள் எல்லோருமே சென்னையில் வெவ்வேறிடத்தில் நல்ல நல்ல பங்களாக்கள் உடையவர்களாகத்தான் இருப்பவர்கள்-நல்ல நல்ல கார்களில்தான் வந்து இறங்குவார்கள். யார் யார் வருவார்கள் என்று எண்ணிப் பார்த்தார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர். ஸர் சீனிவாசன், ஸ்டோன் துரை, திவான்பகதூர் லட்சுமிகாந்தம், மிஸஸ். பார்வதி-இப்படியாக அவர்கள் பெயரை உச்சரித்துப் பார்ப்பதிலேயே எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது என்று எண்ணினார் அவர். அவரது முகம் இருளிலே மலர்ந்தது.

ஆனால், அது சட்டென்று இருண்டது. வேண்டுமென்றே, தம்மை அவமரியாதை செய்யவேண்டும் என்ற ஒரே காரணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/47&oldid=1527298" இலிருந்து மீள்விக்கப்பட்டது