பக்கம்:ஆடரங்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரகப் பிரவேசம்

43

துக்காகச் சிலர் வராமலும் இருக்கக் கூடுமே ! பெரிய மனிதர்கள் பலருக்கு இந்த வக்கிர புத்தி உண்டு என்று எண்ணிய போது, ராவ்பகதூர் நரசிம்ம ஐயருக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் அவர் தமக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக்கொண்டார்.

இந்த பாவம் இரண்டே விநாடியில் மாறிவிட்டது. காரண காரியமில்லாமல் திடீரென்று அவருக்கு அவர் மனைவியின் ஞாபகம் வந்தது. அந்த ஞாபகம் வருவது அவருக்குச் சகஜமான காரியம் அல்ல. அவர் கூடியவரையில் அவளைப்பற்றி நினைப்பதையே விட்டுவிட்டார். இப்பொழுது ஏனோ தெரியவில்லை; இந்தப் புனிதமான தினத்தின் அதிகாலையில் அவள் ஞாபகம் வந்தது. இது சுப சூசகம் அல்ல என்று எண்ணினார் ராவ்பகநூதூர் நரசிம்ம ஐயர். , மனைவி உயிருடன் இருக்கும்போது அவளைப் படாதபாடெல்லாம் படுத்திவைப்பவர்கள் அவள் போனபின் அவளைப்பற்றி இரக்கத்துடனும் ஆசையோடும் -சில சமயம் அன்பும் காதலும் ததும்ப-சிந்திப்பது மனித இயற்கை. உண்மையில் அப்படி இருந்திராவிட்டாலும், ஞாபகத்திலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை கட்டித் தங்கமாக மாறிவிடும். ஆனால், ராவ்பகதூர் நரசிம்ம ஐயர், இந்த விதிக்கு விலக்கானவர். அவள் உயிருடன் இருந்தபோது தம்முடைய சகல உரிமைகளையும் பூராத் திட்டமும் கொண்டாடி அவளைப் படுத்தி வைத்தவர், அவள் இறந்த பின் அவளைப் பற்றிய ஞாபகத்தையே தம் மனத்திலிருந்து ஒதுக்கி வைத்து விட்டார். வேறு ஸ்திரீக்கும் அவர் அங்கே இடம் கொடுத்து விடவில்லை. ராவ்பகதூர் நரசிம்ம ஐயரை, அன்பென்னும் உரிமையுடன் யாரும் அணுகி விடுவது அவ்வளவாகச் சுலபமான காரியம் அல்ல. இருந்தவரையில் வீட்டில் மற்ற வேலைக்காரிகளிடையே ஒரு வேலைக்காரியாக-முக்கியமான வேலைக்காரியாக-இருந்தாள் அவர் மனைவி. அவள் போனபின், வேறு வேலைக்காரி வந்தாள்-இவளுக்கு வீட்டிலே முக்கியத்துவமோ, உரிமைகளோ இல்லவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/48&oldid=1527297" இலிருந்து மீள்விக்கப்பட்டது