பக்கம்:ஆடரங்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஆடரங்கு

தம்முடைய மனைவி போய்விட்டது தம்மைப் பிடித்த சனியன் ஒழிந்தமாதிரி என்றுதான், நரசிம்ம ஐயர் எண்ணினார். அப்படி அவர் எண்ணுவதற்குக் கடவுளே உதவி புரிந்தார் என்றுதான் சொல்லவேண்டும். நரசிம்ம ஐயரின் உத்தியோகம், சம்பளம் எல்லாம் உயர்ந்ததும், அவருக்குப் பட்டம் கிடைத்ததும், எல்லாம் அவள் போன பின்தான். இப்படி இருக்கையில் அவள் இறந்ததுபற்றி, 'சனியன் தொலைந்தது' என்று நரசிம்ம ஐயர் எண்ணியது பூராவும் தவறு என்று யார்தான் சொல்ல முடியும்?

அவருக்கு மனைவியாக இருந்தவளைக் கெட்டவள் என்றோ, நல்லவள் என்றோ சொல்ல முடியாது. அவள் இரண்டும் இல்லை. மிகவும் சாதாரணமான ஒரு ஸ்திரீ. கிராமத்தில் ஏழ்மையில் பிறந்து, பட்டணத்துக் குமாஸ்தாவுக்கு வாழ்க்கைப்பட்டு, அன்பு ஒளியோ, ஆதரவோ இல்லாமல் நாற்பது வருஷ காலம் வாழ்ந்துவிட்டு, ' ஏன் பிறந்தோம், ஏன் வாழ்ந்தோம் ? ' என்ற சஞ்சலங்கூடக் கொள்ளப் போதிய அறிவோ, மனத்தெம்போ இல்லாத ஓர் அற்பப் பிராணி அவள். அவள் வாழ்க்கை, அவளுக்குப் பிறந்த ஒரே குழந்தையால், கொஞ்ச காலம் பளிச்சென்று பிரகாசம் பொருந்தியதாக ஆயிற்று. அந்த ஒளி நீடித்ததெல்லாம் ஒரு விநாடியே என்று அவள் எண்ணினாள். அந்த விநாடி, உண்மையில் காலண்டர்க் கணக்கில், பதினாறு வருஷங்கள் என்பதை அவள் உணரவே யில்லை. அவள் உணர்ந்த தெல்லாம் ஒரு கண இன்பம்தான். பிறகு, தன் பதினாறு வயதுப் பிள்ளையை விட்டு விட்டு, அவள் உயிர் நீத்தாள். அந்தப் பிள்ளையும் ராவ்பகதூர் நரசிம்ம ஐயரின் உள்ளத்தைத் தொடவில்லை.

ராவ்பகதூர் நரசிம்ம ஐயரை உண்மையிலேயே அசாதாரணமான பிறவியாகத்தான் சொல்லவேண்டும். அன்பின் தேவைகளை, அவர் என்றுமே கண்டதில்லை. அன்பைப்பற்றிக் கேட்டறிந்தது, ஒரு காலத்தில் உண்டோ, என்னவோ ? இப்போது அதை மறந்துவிட்டார். தம் காரியாலயத்தில் ஆகட்டும், வெளியே நண்பர்களிடையேதான் ஆகட்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/49&oldid=1527295" இலிருந்து மீள்விக்கப்பட்டது