பக்கம்:ஆடரங்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஆடரங்கு

தெருவோடு விரைந்துகொண் டிருந்தார்கள். அவர்கள் ஏழைகள் ! கூலி வேலை செய்பவர்கள் : ரிக்க்ஷா இழுப்பவர்கள்; அல்லது இதுபோன்ற வேறு ஏதாவது வேலை செய்து அன்றாடம் சம்பாதித்துப் பிழைப்பவர்கள். இவர்களைப் போன்றவர்கள் பலர் சேர்ந்துதான், தமது புதுப் பங்களாவைக் கட்டி முடித்தார்கள் என்று எண்ணினார் ராவ்பகதூர். ஆனால், அதற்குமேல் அவர்களைப்பற்றிச் சிந்திக்க, அவருக்குத் தேவையில்லை. அவர்களுக்குச் சேரவேண்டிய கூலியெல்லாந்தான் ஜாடாவும் கொடுத்துப் பட்டுவாடா ஆகிவிட்டதே !

எதிரே தமது புதுப் பங்களாவின் பக்கம் திரும்பினார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர். மரங்களினூடே புலர்ந்துகொண்டிருந்த இளம் ஒளியில் தெரிந்தது பங்களா. ' மிகவும் அழகாகத்தான் கட்டியிருக்கிறது ! ' என்று எண்ணினார். வீட்டை வந்து பார்த்த ராவ்பகதூர் சீனுவும் அப்படித்தான் சொன்னார். இன்று வரும் மற்றவர்களும் தம்மிடம் அப்படியேதான் சொல்லுவார்கள் என்று நினைத்தபோது, ராவ்பகதூரின் உடல் புளகித்தது.

மறுபடியும் யாரோ அண்டையில் வந்து நின்று நகைப்பது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது நரசிம்ம ஐயருக்கு. ஆனால் இந்தத் தடவை அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.தமது பிரமையை அடுத்த விநாடியே தீர்த்துக்கொண்டுவிட்டார் அவர்.

இதற்குமுன் எவ்வளவோ நாட்கள் - அவரது வாழ்க்கையின் சிகரங்கள் என்று சொல்லக்கூடியவை வந்து போய் விட்டன. முக்கியமாக, அவருக்கு ராவ்பகதூர்ப் பட்டம் வந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்திருந்த அன்று காலை முதல் இரவு தூக்கம் வந்தது வரையில் நடந்த எல்லா விஷயங்களும், அற்பமான சிறு விஷயங்கள்கூட, அவருக்கு நன்றாக ஞாபகமிருந்தன. அதே போன்ற இன்னொரு நாள், இன்று இதோ அவர் கண்முன் உதயமாகிக்கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/51&oldid=1527285" இலிருந்து மீள்விக்கப்பட்டது