பக்கம்:ஆடரங்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரன்பு

49


பல புரிந்து அவனுடைய முன்னோர்கள் ஜயித்துக் கொடுத்திருந்த பரந்த ராஜ்யமும் இருந்தது.

அவனுடைய ராஜ்யத்திலே சுபிக்ஷம் குடிகொண்டிருந்தது. தாது வருஷத்திலே கூட அங்கே பஞ்சம் வருவது கிடையாது. மாசம் மும்மாரி பெய்தது. நிலங்கள் தக்க காலத்தில் சாகுபடி செய்யப்பட்டுச் செழித்துக் கொழித்தன. வருஷம் பூராவும் ஆறுகளும் நீர் நிலைகளும் நிறைந்திருந்தன. மலை வளமும் நில வளமும் கடல் வளமும் நிரம்பிச் செழித்திருந்தது அந்தத் தேசம்.

இவ்வளவு இருந்தும் அரசனுக்கும் அரசிக்கும் மந்திரிக்கும் மற்றுமுள்ள ஜனங்களுக்கும் மனசிலே பெருங் குறை ஒன்றிருந்தது. வெகு காலம் வரையில் ராஜாவுக்குப் புத்திரனே பிறக்கவில்லை.

ராஜாவும் ராணியும் செய்யாத தான தருமங்கள் இல்லை. பூஜை புனஸ்காரங்கள் இல்லை, தங்கள் நாட்டுத் தெய்வங்களை மட்டு மின்றிக் கடல் கடந்து வந்திருந்த அன்னியதெய்வங்களையும் பூஜித்து வேண்டிக்கொண்டார்கள். நாடெங்கும் பற்பல தெய்வங்களுக்கும் பற்பல கோயில்கள் கட்டுவித்தார்கள். பட்டினியும் பாரணையும் மாறிமாறி ஏற்றார்கள். கைலாசம் முதல் குமரி வரை உள்ள புண்ணிய தீர்த்தங்கள் ஒரு கோடியிலும் முழுகி எழுந்தார்கள். புத்திரனில்லாத குறை தீரவில்லை.

விதியுடன் போராடுவது வீண் என்று மன முடைந்து அலுத்துப் போன சமயம் ஒரு கிழ ஜோசியர் வந்தார். அவர் எல்லாக் கிரகங்களையும் சரிவரப் பரிசீலனை செய்து பார்த்துவிட்டுச் சொன்னார்; " இன்னும் இரண்டு வருஷத்தில் நீங்கள் இருவரும் குமரித் துறையில் நீராடிவிட்டு வருவீர்கள். திரும்பிய ஒரு வருஷத்தில் கோடி சூரியனைப் போல ஒளிவீசும் ஒரு பிள்ளை பிறப்பான் " என்றார் ஜோசியர்.

ஜோசியருக்கு மன்னன் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் தானமாகக் கொடுக்கப் போனார். ஆனால் ஜோசியர்

க-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/54&oldid=1528099" இலிருந்து மீள்விக்கப்பட்டது