பக்கம்:ஆடரங்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரன்பு

51

வளர்ந்து பெரியவனானான். அரச குமாரர்களுக்கு ஏற்ற எல்லாக் கலைகளையும் அவன் நன்கு கற்றுணர்ந்தான். யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வில்வித்தை, வாள் வித்தை எல்லாவற்றிலுமே நல்ல தேர்ச்சி பெற்று அவன் பதவியினால் மட்டுமின்றி பலத்திலும் அறிவிலும் பயிற்சியிலும் தேசத்திலேயே முதல்வனானான். அவனுக்கு வயதை மீறிய ஞானமும் அறிவும் இருந்தன. தங்களிடையே இரண்டாவது ராமன் அவதரித்து விட்டான் என்று எண்ணி மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

வேட்டையாடுவதும் வில்வித்தையும் மல் யுத்தமும் இராஜகுமாரனுடைய மனத்துக் குகந்த பொழுது போக்குகளாக இருந்தன.

இப்படி யிருக்கையில் ராஜாவுக்கும் ராணிக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ராஜகுமாரனுக்கும் கலியாண வயது வந்து விட்டது. அவனுக்குத் தக்க பெண்ணாகப் பார்த்துக் கலியாணம் செய்து வைத்துவிட்டு, பின்னர் நாட்டுக்கு அவனை மன்னனாக முடி சூட்டிவிட்டு, தாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமே என்று ராஜாவும் ராணியும் விரும்பினார்கள்.

இராஜகுமாரனின் புகழ் - அழகன் என்றும் வீரன் என்றும் அறிஞன் என்றும் நாடெங்கும் பரவி யிருந்தது. ஐம்பத்திரண்டு தேசத்து அரசர்களும் அவனுக்குத் தங்கள் தங்கள் பெண்ணைக் கொடுத்துச் சம்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள். ராஜ குமாரத்திகளின் சித்திரங்களைத் தீட்டித் தூதுவர்களிடம் கொடுத்தனுப்பி ஓலை விட்டார்கள்.

சித்திரங்கள் எல்லாமே அழகாகத்தான் இருந்தன என்று பட்டது ராஜகுமாரனுக்கு. ராஜகுமாரிகளை நேரில் பார்த்தாலும் அழகாகத்தான் இருப்பார்கள். ஓரிருவரின் சித்திரம் அதி அற்புதமான அழகைக் காட்டியது. ஆனால் அவர்களில் யாரிடமும் ராஜகுமாரனின் மனம்செல்லவில்லை.இதைத் தன் தகப்பனாரிடமும் மந்திரியிடமும் ராஜகுமாரன் ஒளிக்காமல் சொல்லி விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/56&oldid=1528108" இலிருந்து மீள்விக்கப்பட்டது