பக்கம்:ஆடரங்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஆடரங்கு


வேடிக்கையாக அவன் மேலும் சொன்னான்: " இந்த ஐம்பத்திரண்டு தேசத்து ராஜகுமாரிகளையுமே கலியாணம் பண்ணிக்கொண்டுவிட நான் தயார் - நீங்கள் அப்படிவிரும்பினால். ஆனால் அவர்களில் யாரிடமும் என் மனம் ஈடுபடாது என்பது. மட்டும் நிச்சயம். "

அரசன் வருந்தினானே தவிரத் தன் பிள்ளையை வற்புறுத்த வில்லை.

இதற்கிடையில் ராஜகுமாரன் அடிக்கடி தனியாகவும் வேடுவர்களுடனும் வேட்டையாடக் காட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். இப்படி அவன் ஒருதரம் தனியாகப் போய் விட்டுத் திரும்பி வரும்பொழுது தனியாக வரவில்லை. ஓர் அழகியையும் உடன் அழைத்து வந்தான்.

அந்த அழகியின் கண்கள் ...... ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருப்பானேன் ? தவிரவும் அவள் அழகை வர்ணிப்பது என்பது கவிகளால்கூட ஆகாத காரியும். அவ்வளவு அழகி அவள்.

" இவளையேதான் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன் " என்றான் ராஜகுமாரன்.

அரசன் எதுவும் தடுத்துக் கூறவில்லை. ஆனால் அந்த அழகி யார்? தன் மகன் எங்கே எப்படி அவளைச் சந்தித்தான் என்பதை அறிய முயன்றான். காட்டில் ஒரு தடாகக் கரையில் அவள் உட்கார்ந்து அழுதுகொண் டிருந்ததைக் கண்டு தேற்றி ராஜகுமாரன் அவளை அழைத்து வந்திருந்தான். அவளைப்பற்றி வேறு ஒரு விவரமும் அவனுக்கும் தெரியாது. " ஆனால் இவள் தான் என் துணைவி என்று என் மனம் அங்கீகரித்துவிட்டது. அவ்வளவுதானே வேண்டியது?" என்றான் அவன்.

ராணி அந்த அழகியையே விசாரித்துப் பார்த்தாள். கன்னி வாயைத் திறக்கவேயில்லை. ராணிக்குத் தாழ்ந்து நமஸ்காரம் செய்துவிட்டுக் குனிந்த தலை குனிந்தபடியே ஒதுங்கி நின்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/57&oldid=1528111" இலிருந்து மீள்விக்கப்பட்டது