பக்கம்:ஆடரங்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரன்பு

53

அவள். அந்த அழகி ஊமையோ என்று ராணிக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது.

ஆனால் சந்தேகத்துக்கு அவசியமில்லை. மாலையில் வீணையை மீட்டிக்கொண்டு அந்த அழகி சரஸ்வதியே போல வீற்றிருந்து இனிய கீதங்களை இசைத்தாள். அக் கீதங்கள் கேட்போர் காதில் தேவகானமாக ஒலித்தன ; கேட்பவரை ஆனந்த மயமான ஒரு புது உலகிலே கொண்டுபோய்ச் சேர்த்தன.

கலியாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காட்டுக்கு வேட்டையாடப் போவதையும், மல் யுத்தங்களில் ஈடுபடுவதையும் அரச குமாரன் நிறுத்திவிட்டான். ஆற்றங் கரையிலே அழகான வசந்த மாளிகை நிர்மாணித்துக் கொண்டு தன் காதலியுடன் இன்ப வாரிதியிலே ஆழ்ந்துவிட்டான். அறுபது நாழிகையும் அங்கே இன்னிசையும் நடனமும் கதையும் கவிதையுந்தான்.

ராஜ்ய காரியங்கள் எல்லாம் கிழ ராஜாவின் மேற்பார்வையில், மந்திரியின் திறமையால் ஒழுங்காகவே நடைபெற்றுவந்தன. எனினும், ராஜாவும் ராணியும் மந்திரியும் பல வருஷங்களுக்கு முன் கிழ ஜோசியர் சொன்ன வார்த்தைகளை எண்ணித் துக்கித்தனர். ஜோசியரின் வார்த்தைகள் பலிக்கும் காலம் வந்து விட்டதுபோல் இருக்கிறதே என்று அஞ்சித் துணுக்குற்றனர்.

"நடப்பது நடக்கும். நடந்தே தீரும்" என்று எண்ணி அவர்கள் தங்களையே தேற்றிக்கொண்டார்கள்.

எனினும், அரச குமாரனின் மனத்தைச் " சரியான வழியில் " திருப்ப அவர்கள் தங்களாலான முயற்சிகளையும் செய்யாமல் இல்லை. இன்பம் திகட்டியிருந்த ஒரு சமயம் ராஜகுமாரனை வேட்டையாடக் காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள், சித்தப் பிரமை பிடித்தவன்போல, மனத்தை எதிலோ பறிகொடுத்தவன் போலச் சுய ஞாபகம் இல்லாமல் வந்தான் அவன். ஆனால் வேட்டை ஆரம்பித்ததும் அவன் மனம் சற்றே மாறுவதுபோல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/58&oldid=1528112" இலிருந்து மீள்விக்கப்பட்டது