பக்கம்:ஆடரங்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ஆடரங்கு


காரியம் என்றே அவனுக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதன் தன் மனைவியிடமும் குழைந்தையிடமும் காட்டும் அன்பே தன் காரியத்துக் கெல்லாம் அடிப்படையானது என்று அவன் நம்பி இருந்தான்.

ஆனால் அவன் காதலி தெய்வாம்ச மானவள் என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டார்கள். அன்புத் தேவியே அவ்வடிவு எடுத்து வந்து அவனை ஆட்கொண்டு, அடிமைப்படுத்தி விட்டாள் என்று சொல்லிக்கொண்டார்கள். கணவன் இறந்தபோது, ஒரு துளி கண்ணீர்கூட வடிக்காமல் அவள், "நாம் இருந்ததும் வாழ்ந்ததும் பூராவும் வியர்த்தமாகி விடாது " என்று சொல்லிவிட்டு அந்தர்த்தான மாகிவிட்டாள் என்று ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். சொல்லியது மட்டுமல்ல; நம்பவும் நம்பினார்கள். பேரன்புக்குப் பெரும் உதாரணமாக அவனைக் கவிகள் பாடினார்கள்: சாதாரண மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

ஆனால் நாளடைவில் அவன் பெயர் கூட மக்கள் மனத்திலிருந்து அகன்றுவிட்டது.

“ கதை சரியாகப் புரியவில்லையே ! " என்றேன் நான்.

"உனக்கு என்னமாடா புரியும் ? புரியாதுதான். குழந்தைக்குப் புரிந்திருக்கும். சரோஜா ! உனக்குப் புரிந்ததோ ? " என்றாள் சுந்தாப் பாட்டி.

“ ஊம் ” என்றாள் சரோஜா.



 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/61&oldid=1528116" இலிருந்து மீள்விக்கப்பட்டது