பக்கம்:ஆடரங்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஆடரங்கு

கேட்டுக்கொண்டு பேசுவதற்கு உட்காருகிற சுபாவம் படைத்த ஆசாமி அல்லவா நான் ?

""ஏன் ஸார்? இன்று உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியாக இல்லையா? என்னவோ போல இருக்கிறீர்களே !" என்றேன்.

"என் உடம்புக்கு ஒன்றுமில்லை. என் பயலுக்குத்தான் உடம்பு சரியாக இல்லை. வயிறு சரியாக இல்லை. கஞ்சி, மருந்து. எதுவுமே வயிற்றிலே தங்கமாட்டேன் என்கிறது. நேற்று ராத்திரி முதல் அவஸ்தைப் படுகிறான் " என்றார் சுவாமிநாதன்.

சுவாமிநாதனுடைய பழக்க வழக்கங்கள் ஒன்றிரண்டு எனக்குத் தெரியும். நான் சொன்னேன்: "இருந்தாலும் இரண்டு வயசு சரியாக நிரம்பாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் நீங்க ஹோட்டல்லே வடை வாங்கித் தரது பிசகுதான் ஸார். நம்மைப்போலப் பெரியவாளுக்குக்கூட, சில சமயம் ஹோட்டல் சாமான் ஒத்துக்க மாட்டேன் என்கிறது. குழந்தைக்கு எப்படி ஒத்துக்கும் ! ஒண்ணும் பிசகாயிராது; சாப்பிட்டது ஏதாவது ஜீரணமாகாமல் இருக்கும். அவ்வளவுதான். நாளைக்குத் தானே சரியாய்ப் போய்விடும்."

"ஆமாம், ஆமாம், நீங்க சொல்றது சரிதான். அழறானேன்னு நான் ஏதாவது வாங்கித்தரேன்; என் தம்பி வேறு ஏதாவது வாங்கித் தரான்; அவள் வேறே கொடுத்து விடுகிறாள்! எல்லாமாகச் சேர்ந்து குழந்தையைப் படுத்தறது!" என்றார் சுவாமிநாதன்.

இப்பொழுதுதான் சற்றே வெளிச்சமாக இருந்த இடத்துக்கு நகர்ந்து வந்தார் சுவாமிநாதன். முகத்தைக் கண்ட நான் திடுக்கிட்டுப் போனேன். அதில்தான் என்ன கவலையும் ஏக்கமும் படர்ந்திருந்தன ! ஏன் இப்படி !

என் மனசில் இருந்த கேள்வியை ஊகித்து அறிந்துகொண்டவர் போல அவர் பதில் அளித்தார்: "ஏற்கனவே ஒரு தரம். பட்டாச்சோ இல்லையோ ? இப்போ பயமா இருக்கு. தவிரவும் நேற்று ராத்திரி பூராவும் தூக்கமே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/63&oldid=1528199" இலிருந்து மீள்விக்கப்பட்டது