பக்கம்:ஆடரங்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூக்கம்

59


நான் தைரியம் சொன்னேன்: "என்ன ஸார் இப்படிப் பயப்படறேள்? தானே நாளைக்குச் சரியாகப் போயிடும். நீங்கள் பயப்படறபடி எல்லாம் ஒன்றும் நடந்து விடாது. கவலைப் படாதீர்கள். மனுஷன்னு பிறந்தவனைக் கடவுள் சோதிக்கத்தான் சோதிக்கிறார். ஆனால் எப்பவும் சோதித்துக்கொண்டே இருப்பாரா என்ன?" என்றேன்.

நான் கூறியதாலெல்லாம் தைரியம் வந்து விடவில்லை அவருக்கு. அவர் சிந்தனையை எங்கேயோ பறி கொடுத்துவிட்டு நான் சொன்ன வார்த்தைகளைக் காதில்கூட வாங்காமல் உட்கார்ந்திருந்தார்.

அவர் மூன்று நான்கு வருஷங்களுக்குமுன் இரண்டு வயசுப் பையன் ஒருவனைப் பறி கொடுத்தவர் என்று நான் கேள்விப் பட்டதுண்டு. அவர் அப்போது எவ்வளவு கஷ்டப்பட்டார் என்றும், அவருக்கு ஆறுதல் சொல்லி மனசை மாற்ற யாராலும் முடியவில்லை என்றும் பிறகு கேள்விப்பட்டேன்.

"சுத்தக் கோழையாக இருக்கிறேளே, ஸார் ! கொஞ்சம் தெம்பா இருக்க வேண்டாமோ? குழந்தைகளுக்குச் சதா சர்வதா உடம்பைப் படுத்திக்கொண்டுதான் இருக்கும் " என்று சொன்னேன் மேலும்.

அவர் வேறு எங்கேயோ ஞாபகமாக, "உம்" என்றார். பிறகு ஒரு விநாடி கழித்து, "தம்பி டாக்டரிடம் குழந்தையைக் காட்ட எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். போய் ஒரு மணி ஆச்சு. வந்துவிடுவான் இப்போ" என்றார்.

இந்தப் பனியிலேயா?" என்று நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் தம்பி வெங்கிட்டு வந்துவிட்டான். அவன் தன்னுடன் குழந்தையைக் கொண்டு வரவில்லை.

அண்ணா பதற்றப்படுவாரே, விஷயத்தை உடனே சொல்ல வேண்டுமே என்று அவனுக்குக் கவலை வேண்டாமோ? கவலை இருந்தாலும் அண்ணாவைக் கொஞ்சம் அலக்ஷ்யம் செய்கிற மாதிரிதான் இருக்கட்டுமே என்று எண்ணினானோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/64&oldid=1528203" இலிருந்து மீள்விக்கப்பட்டது