பக்கம்:ஆடரங்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கிறுக்கெழுத்து

ன்னும் மயிரிழை தப்பியிருந்தால், பஸ் ஆறுமுகத்தின் மேல் ஏறியிருக்கும். பஸ்காரன்மேல் பிசகில்லை. தெரு ஓரத்தில் நடை பாதையில் மெள்ளத் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்த ஆறுமுகம் திடீரென்று நடு ரோடுக்கு அப்படி எகிறிக் குதித்து ஓடி வருவானென்று பஸ் ஓட்டுபவன் எதிர் பார்த்திருக்க முடியுமா என்ன !

" என்னப்பா? வூட்டிலே சொல்லிக்கினு வந்தூட்டியா?” என்று தன்னைப் பஸ்காரன் கோபமாக ஏசியது ஆறுமுகத்தின் காதில் விழுந்தது. அவனுக்கு வீடுமில்லை, சொல்விக்கொள்ள யாருமில்லை என்று பாவம், அந்தப் பஸ்காரனுக்கு எப்படித் தெரியும்? தன்னைத் தாண்டி ஓடிவிட்ட பஸ்ஸைப் பார்த்துக் கொண்டே ஆறுமுகம் ஆடி விழுந்துகொண்டு மேலே நடந்தான்.

அவன் ஆட்டத்துக்குக் காரணம் குடி அல்ல. அவன் அன்று குடிக்காததற்குக் காரணம் அவன் கையில் காசு இல்லா ததுதான். அவன் கையில் இரண்டு காசிருந்தால் நிம்மதியாகக் குடித்துவிட்டுத் தன் கவலைகளையெல்லாம் மறந்து ஏதோ ஒரு தினுசான இன்பமும் சாந்தியும் பெற்றிருப்பான். அவனுக்கு அந்த உரிமைகூட இல்லையென்று யார் தடுக்க முடியும் ? ஒரு வாரமாக ஈசுவரன் அவனுக்கு அந்த அல்ப சாந்திக்குக்கூட வழி வில்லாமல் வைத்துவிட்டான். ஆறுமுகம் குடித்தே ஒரு வாரம் ஆய் விட்டதென்றால், அவன் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகியிருக்குமென்று கணக்கில் நிபுணர்களைத்தான் கேட்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/71&oldid=1528213" இலிருந்து மீள்விக்கப்பட்டது