பக்கம்:ஆடரங்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறுக்கெழுத்து

67


"அந்தப் பஸ்ஸிலே மாட்டிக்கொண்டு உசிரை விட்டிருந்தாலும் சரியாய்ப் போயிருக்குமே!" என்று எண்ணினான் ஆறுமுகம்.

அப்படி எண்ணுவது சுலபமே தவிர, அந்த விநாடியிலே கூட அவனுக்கும் உயிர் வாழவேணுமென்ற ஆவல்தான் தலை தூக்கி நின்றது. சற்றுமுன் அவன் தெரு ஓரத்திலிருந்து நடுத்தெருவுக்கு எகிறிக் குதித்த காரணம் இந்த உயிர் வாழும் ஆவல்தான். ஓரத்தில் கிடந்த பாம்பு கடித்து உயிரை இழக்க அவனுக்கு இப்போது மனமில்லை. ஆனால் இப்போது....ஆறுமுகம் திரும்பிப் பார்த்தான், தெரு ஓரத்தில் சுருட்டிக்கொண்டு கிடந்தது பாம்பல்ல. ஒரு நீண்ட கப்பாணிக் கயிறுதான். பட்டணத்துப் பாதையிலே பாம்பு வெளிவந்து விட்டால்...!

"தெய்வமே, எனக்கு ஒரு வழி காட்ட மாட்டாயா?" என்று பிரார்த்தித்துக்கொண்டே ஆறுமுகம், கால்கள் பின்ன, தள்ளாடித் தடுமாறிக் கண்ணும் உடலும் சோர மேலே நடந்தான்.

அவனும் ஒரு காலத்தில் மனிதனாக, உழைத்துச் சாப்பிட்டு வாழ முயன்றவன்தான். அப்போதெல்லாம் அவனுக்கு அன்றாடம் அரை ரூபாய், முக்கால் ரூபாய் என்று கூலி வரும். அவனுடன் அவன் வறுமையையும் சுக துக்கங்களையும் பங்கிட்டுக்கொள்ள ஒரு பெண் பிள்ளையும் இருந்தாள். அதைவிட எவ்வளவோ சிறந்த வாழ்க்கை நடத்துபவர்கள் அநேகர் இருக்கலாம். ஆனால் ஆறுமுகம் அதையெல்லாம் எண்ணி ஆசையோ பொறாமையோ படவில்லை. ஏதோ அவன் வாழ்வும் அதிகக் கஷ்டமின்றி நடந்தது; பொழுது சில சமயம் கழிவதே தெரியாமலும் சில சமயம் வெகு சிரமமாகவும் சுழிந்தது! உடம்பிலே பலம் இருந்தது; மனத்திலே எப்பொழுதும் சோர்வில்லை. சில விநாடிகளாவது தெம்பு இருந்தது.

திடீரென்று ஒரு நாள் அவனுக்குக் குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. ஒரு நாள், இரண்டு நாள்...ஐந்து நாள் பார்த்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/72&oldid=1528214" இலிருந்து மீள்விக்கப்பட்டது