பக்கம்:ஆடரங்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறுக்கெழுத்து

69


கவனிக்குமிடத்து, மனிதன் மனத்தை மயக்கவல்ல சாதனங்களாகவே தோன்றுகின்றன.

ஆறுமுகம் குடித்து ஒரு வாரத்துக்கு மேலேயே ஆகிறது. சரியான உணவு அருந்திப் பத்துநாளுக்கு மேல் இருக்கும். பசிலாகிரியில் அவன் ஆகாயத்தில் பறக்கும் பக்ஷிபோலக் கனமின்றி, நடக்கிறோம் என்ற பிரக்ஞை யில்லாமல் நடந்துகொண்டிருந்தான்.

ஆனால், நல்ல வேளை, அவனுக்கு லட்சியமென்ற போதை இல்லை. அவன் எழுதப் படிக்க அறியாதவன். தமிழில் ஒரு கவி, 'தனி ஒரு மனிதனுக்கு...' என்று ஆரம்பித்துக் கவிதை செய்து வைத்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியாது. ரஷ்யா என்றால், 'வக்கீலையர் தோட்டத்துக்கு அப்பால் இருக்கிறதே, அதுவா?' என்று கேட்பான் அவன். ஆனால் அவன் மங்கிய கண்கள் தூரத்தில் எங்கேயோ கனவு போலத் தெரிந்த ஏழைமை, பட்டினி பலி என்பதறியாத ஒரு லோகத்தில்தான் லயித்திருந்தன. இதையெல்லாம் வார்த்தைகளில் சொல்ல அவன் அறியான். சோஷியலிஸம் என்ற கொள்கை அவசியம் என்பதற்கே ருசுப்போல அமைந்திருந்தன அவன் உடலும் உள்ளமும்.

அவன் வயிறு பசித்தது. நா வறட்சி எடுத்தது. தன் பசிக்கு ஒரு கவளம் சோறு அளிக்காத உலகம் என்ன உலகம் என்று உலகைப் பற்றிய விசாரத்தில் ஆறுமுகம் இறங்கவில்லை. உலகத்துக்கு எங்கும் போக்கிடம் கிடையாது என்று அவனுக்குத் தெரியும்.

ஆனால் அவன் போய்விட முடியும். அவனை வெளியேற்றத்தான் உலகம் தன்னாலான முயற்சியைச் செய்துகொண்டிருந்தது. அப்படியும் அவன் உலக வாழ்வை இகழ்ந்துவிடவில்லை. அரைக்கால் வயிறு உணவாவது; தொண்டை நனையக் கள்ளாவது அச்சமயம் கிடைத்துவிட்டால், அவன் "ஓஹோ ஹோ! இந்த உலகம், பூவுலகம், இன்பமயமானது" என்று ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்திருப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/74&oldid=1525079" இலிருந்து மீள்விக்கப்பட்டது