பக்கம்:ஆடரங்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஆடரங்கு


அருகிலிருந்த ஒரு லாந்தர்க் கம்பத்தின்மேல் சாய்ந்து கொண்டு, நடந்ததனால் ஏற்பட்ட களையை ஆற்றிக்கொள்ள முயன்றான். தெருவிலே ஜன நடமாட்டம் அதிகமில்லை. மாலைநேரம். வானத்திலும் மேகங்கள் கவிழ்ந்திருந்தபடியால் வெளிச்சம் அதிகமில்லை. பட்டணத்துக் கடியாரப்படி இன்னும் 'லைட்டிங் டயம்' ஆகவில்லை. அந்த மங்கிய ஒளியில் களைப்பால் இருண்டுகொண்டிருந்த ஆறுமுகத்தின் கண்களில் தெருவில் எதிர்ப்புறத்தில் அவனுக்கு நேரே ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பிச்சைக்காரனுக்கு எதிரே விரித்திருந்த துணியில் ஆறு, ஏழு காலணாக்கள் கிடந்தன.

அந்தப் பிச்சைக்காரனைக் கவனித்தான். அவன் குருடனென்று முதலில் ஆறுமுகத்துக்குத் தெரியாது. அது நிச்சயப்பட்டவுடன், அவன் மனத்தில் பளிச்சென்று ஒரு யோசனை உதித்தது.

தெருவிலே அதிக வெளிச்சமோ ஜன நடமாட்டமோ இல்லாதிருந்தது ஆறுமுகத்தின் காரியத்துக்கு ஒத்தாசையாக இருந்தது. யாரும் தன்னைப் பார்க்க முடியாத சமயம் பார்த்து எதிர்ப் பக்கம் போய்ச் சட்டென்று குனிந்து குருட்டுப் பிச்சைக்காரன் துணியில் கிடந்த ஏழு காலணாக்களையும் கையில் சப்தமின்றி எடுத்துக்கொண்டான்.

ஆனால் அவன் பிறகு நகர்ந்தபோது அவன் காலடிச் சப்தம் குருடன் காதில் விழுந்துவிட்டது போலும்! குருடன் வழக்கம் போலக் கையை நீட்டி. "கண்ணிலாத கபோதி ஐயா! காலணா போடையா, பிரபுவே!" என்று பரிதாபமான குரலில் கெஞ்சினான்.

உடனே ஆறுமுகம் தன் கையிலிருந்த காலணுக்களில் ஒரு காலணாவை எடுத்துத் தாராளமாகப் பிச்சைக்காரனுக்கு முன் எறிந்துவிட்டுத் தன்னால் முடிந்த வேகத்துடன், அங்கிருந்து நடந்துவிட்டான்.! ஒரு வழியாக அத்தெரு மூலை திரும்பியாகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/75&oldid=1525091" இலிருந்து மீள்விக்கப்பட்டது