பக்கம்:ஆடரங்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறுக்கெழுத்து

71

அடுத்த தெருவில் வேறு ஒரு லாந்தர்க் கம்பத்தின்மேல் சாய்ந்துகொண்டு வெகு நேரம் நின்றான் ஆறுமுகம். அவன் மனத்தில் என்ன என்ன சிந்தனைகள் தோன்றி மறைந்தன என்று நவீன மனத் தத்துவ ஆராய்ச்சி நிபுணர்களால்கூடக் கண்டுபிடிக்க முடியாது. அவன் சிந்தனைகளின் வேகம் அவனுக்கே தெரியவில்லை. மடியில் வைத்துக்கொண்ட ஆறு காலணாக்களையும் கையில் எடுத்துக்கொண்டு ஆறுமுகம் வந்த வழியே திரும்பினான். மூலை திரும்பியதும் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் பழைய இடத்திலேயே உட்கார்ந்திருந்தது தெரிந்தது. ஆனால் அவன் இப்போது தனியாக இல்லை. அவனை ஒட்டிக் கண் பார்வையுள்ள ஒரு சிறு பெண் உட்கார்ந்திருந்தாள். அவர்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டொரு பிச்சைக்காரர்களும் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.

தெருவில் காலடிச் சப்தம் கேட்டவுடன் குருடன், "கண்தெரியாத கபோதி ஐயா, காலணாப் போடையா!" என்று வழக்கம்போலக் கெஞ்சினான். பக்கத்திலிருந்த மற்றப் பிச்சைக்காரர்களும் குரல் கொடுத்தார்கள். ஆறுமுகம் கையிலிருந்த ஆறு காலணாக்களையும் குருட்டுப் பிச்சைக்காரன்முன் விரித்திருந்த துணியில் போட்டுவிட்டு மேலே வேகமாக நடக்க முயன்றான்.

முடியவில்லை. அவன் கால்கள் பின்னின, குருடனுக்குப் பக்கத்திலிருந்த பிச்சைக்காரர்கள் இப்படிப்பட்ட 'தர்மப் பிரபு' தங்களைத் தாண்டிக்கொண்டு போவதைப் பார்த்துச் சும்மா இருப்பார்களா! இந்தத் தர்மப்பிரபு ஏதோ ஒரு தினுசாகத்தான் இருந்தான்.

ஆனால் அவர் எப்படி இருந்தால் என்ன? அவர்களுக்கு ஆளுக்கு ஒரு காலணா கிடைத்தால் சரிதான். "ஐயா ஒரு காலணா" என்று முனகிக்கொண்டே குருடனுக்குப் பக்கத்தில் இருந்த பிச்சைக்காரர்கள் எழுந்து ஆறுமுகத்தைப் பின் தொடர்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/76&oldid=1528216" இலிருந்து மீள்விக்கப்பட்டது