பக்கம்:ஆடரங்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

ஆடரங்கு


ஆறுமுகம் ஈனமான குரலில் என்ன சொல்லிப் பார்த்தும் அவர்கள் அவனை விடுவதாக இல்லை. ஆறுமுகம் நின்று திரும்பித் தன்னை நோக்கிக் கெஞ்சிக் கைநீட்டிய பிச்சைக் காரர்களையே கெஞ்சும் பாவனையில் நோக்கிக் கையை நீட்டினான்.

அவனுக்கு வார்த்தை சொல்லச் சக்தி இல்லை. இருந்திருந்தால்,"ஐயா ஒரு காலணா!" என்று அவனும் கேட்டிருப்பான்.

அதே விநாடி கார்ப்பொரேஷன் தெரு மின்சார விளக்குகள் பளிச்சென்று எரியத் தொடங்கின.

பிரம்மதேவரின் உள்ளத்திலே ஏதோ சுருக்கென்று முள் போலத் தைத்தது. மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு பூலோகத்தை நோக்கினார்.

மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் நிறைந்த சென்னைமா நகரிலே நம்மாழ்வார் தெருவிலே பூமாதேவியின் மடியிலே தவழ்ந்து. விளையாடி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து முப்பதாவது வயசை எட்டிவிட்ட ஆறுமுகம் பிள்ளை புதிதாகப் பிச்சைக்காரனாகிப் பிச்சைக்காரர்களிடமே பிச்சை கேட்கும் மாபெரும் சாயுஜ்யத்தை அடைந்துவிட்டான் என்று அவர் கண்டார். ஆனால் அதற்குமேல் ஆறுமுகத்தின் லிபி என்ன என்று அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. அந்த நிலைமையை எவ்வளவு நேரம் நீடித்து வைப்பது?

பிரம்மதேவர் தம் மேஜைமேலிருந்த ஒரு வெள்ளி மணியைப் பதற்றத்துடன் நாலு தரம் தட்டினார். காரியதரிசிக்குப் பதிலாக ஸரஸ்வதிதேவி வந்தாள். அதைக் கவனியாமல் காரியதரிசிதான் வந்தாராக்கும் என்று எண்ணி, பிரம்மதேவன் அதட்டும் குரலில், ஆறுமுகம் பிள்ளையின் லிபிப் பிரதிச்சுவடியை எடுத்து வாரும், ஜல்தி!" என்று அதிகாரம் செய்தார்.

"என்ன இது? அதிகாரம் பலமாயிருக்கு!" என்று ஸரஸ்வதிதேவி கேட்டபின்தான், பிரம்மா நிமிர்ந்து பார்த்து வந்தது யாரென்று அறிந்துகொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/77&oldid=1525106" இலிருந்து மீள்விக்கப்பட்டது