பக்கம்:ஆடரங்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறுக்கெழுத்து

73


பிறகு காரியதரிசி வந்தார். " ஆறுமுகம் பிள்ளையின் லிபிச் சுவடியை எடுத்துவாரும் "' என்று உத்தரவிட்டார் பிரம்மதேவர். அவர் குரலில் கலவரமும் அவசரமும் தொனித்தன.

"எந்த ஆறுமுகம் அது?” என்றார் காரியதரிசி.

பிரம்மாவுக்குக் கோபமே வந்துவிட்டது. "என்ன! ஏது என்றெல்லாம் நான் .. சொல்லுவதற்காகவா ஐயா, உம்மைக் காரியதரிசி என்று சம்பளம் போட்டு வைத்திருக்கிறது?" என்றார்.

காரியதரிசி, போனேன் வந்தேன் என்று ஒரு விநாடியில் கையில் மண்டையோட்டைப் போன்ற ஒரு வஸ்துவுடன் திரும்பிவந்தார்.

அந்த மண்டை ஓட்டைக் கையில் வாங்கிப் பிரம்மதேவர் தம் மேஜை இழுப்பிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து அதன் மூலம் பார்த்தார். எதையோ வாசிப்பதைப் போல அவர் வாய் முணுமுணுத்தது. நெற்றியைச் சுருக்கிக்கொண்டு மண்டை ஓட்டைக் கண்ணருகில் கொண்டுபோய்ப் பார்த்தார். பொத்தானை அமுக்கி விளக்கை ஏற்றிப் பார்த்தார். கடைசியில், "ஊஹும்! புரியவில்லை. நீர் பாரும் புரிகிறதா என்று? இதற்கு மேலே என்ன எழுதியிருக்கிறது? என் எழுத்தாணி அன்று எதையோ கிறுக்கிவிட்டது. என் எழுத்து எனக்கே புரியவில்லையே” என்று சொல்லி மண்டை ஓட்டைத் தம் காரியதரிசியிடம் கொடுத்தார்.

ஒரு நிமிஷம் அதைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு, "எனக்கும் புரியவில்லையே!" என்றார் காரியதரிசி.

பிரம்மதேவர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு சொன்னார்:- "ம் ...... எழுத்தாணியை இப்படிக் கொடும். வேண்டாம்; நீரே அதன்மேல் எழுதும். ஆறுமுகம் பிள்ளைக்கு லாட்டரிச் சீட்டில் ஒரு லக்ஷம் கிடைத்துவிடுகிறது...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/78&oldid=1528217" இலிருந்து மீள்விக்கப்பட்டது