பக்கம்:ஆடரங்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஆடரங்கு


காரியதரிசி எழுதுவதை நிறுத்திவிட்டு, "பிரபோ, ஒரு சந்தேகம். அவன் முன்பு எதுவும் லாட்டரிச் சீட்டு வாங்கியதாக இதுவரை காணப்படவில்லையே ” என்றார்.

"என்ன ஐயா இது? உலகத்திலே இருக்கிற பத்திரிகை யெல்லாம் நம்ம ஆபீஸுக்கு வருகின்றன. நீங்கள் அவற்றில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றைக்கூடப் பிரித்துப் பார்த்ததில்லையா? பார்த்திருந்தால் இந்தச் சந்தேகம் உமக்குத் தோன்றியிராது. ஆறுமுகம் லாட்டரி டிக்கட் வாங்காவிட்டால் என்ன? தெருவில் யாரோ நழுவ விட்டுவிட்டுப்போன லாட்டரிச் சீட்டு அவனுக்குக் கிடைக்கிறது. அந்தச் சீட்டுக்குத்தான் பரிசும் விழுகிறது..."

"புத்தி” என்றார் காரியதரிசி.

"எழுதி விட்டேன். தமிழ்ப் பத்திரிகைப் பாணியிலேயே மற்றதையும் எழுதிவிடட்டுமா? 'அந்தோ! பரிதாபம் ! அவன் அந்த லக்ஷத்தை அனுபவிக்காமல் இறந்துவிட்டான்! என்னே கொடுமை!' என்று எழுதிவிடட்டுமா?" என்றார்.

"வேண்டாம். அவன் அந்த லக்ஷத்தைப் பாங்கில் பத்திரப் படுத்திவிட்டு, சோஷியலிஸ்ட் கக்ஷியில் சேர்ந்துவிட்டான் என்று எழுதும்” என்றார் பிரம்மதேவன்.

“கிளம்பலாமா? நாழியாகிறது" என்றாள் ஸரஸ்வதி தேவி,

காரியதரிசியை நோக்கிப் பிரம்மதேவன், "அவ்வளவு தான்; நீர் போகலாம்” என்றார்.

பூலோகத்திலும் பிரம்மலோகத்திலும் நடந்ததெல்லாம் இதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/79&oldid=1525262" இலிருந்து மீள்விக்கப்பட்டது