பக்கம்:ஆடரங்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீங்க தூங்கறச்சேதான்

77

கொண்டுவந்து வைத்துவிட்டு உங்கள் எதிரிலேயே மீண்டும் உட்கார்ந்து தூங்கத் தொடங்கிவிடுவான்.

இந்தப் பையனைப்பற்றிப் பல அபூர்வமான கதைகள் சொல்வார் ராமலிங்கையர். நிஜமோ, பொய்யோ அந்த நிமிஷக் கற்பனையோ-நல்ல கதைகள். காபி சாப்பிடப் போகிறவர் காபி நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்கொண்டே தீர வேண்டும். ஆனால் அவர் சொல்கிற கதை உண்மைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியது அவசியம் இல்லையல்லவா? உங்கள் அவநம்பிக்கை முகத்திலே பிரதிபலித்துவிடும். அவ்வளவுதான்! தாம் சொன்னது உண்மை என்று நிரூபிக்கத் தொடங்கி விடுவார் ராமலிங்கையர். ‘டே பயலே’ என்பார். தாடையில் ஓங்கி இரண்டு கைகளாலும் போட்டுக்கொண்டே விழித்துக் கொள்வான் பையன்.

“நான் சொன்னதெல்லாம் நிஜந்தானேடா” என்பார் ராமலிங்கையர்.

“ஆமாம், மாமா” என்பான் பையன். அதற்கப்புறமும் நம்ப மாட்டேன் என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும் ?

ராமலிங்கையர் சொல்வார்: “இந்த டிராயரிலே பணம் நோட்டு நோட்டாகப் போட்டுப் பூட்டி விட்டுப் போவேன் ஸார், திரும்பி வந்து பார்க்கிறபோது நாலு ஐந்து குறையும். ‘என்னடா இது ? நான்தான் கணக்குத் தப்பா நினைத்தேனோ ?’ என்று எண்ணுவேன். இப்படி ஏழெட்டுத் தரம் நாள் தவறாமல் கணக்குந் தப்பாப் போனதும், நான் பையனைக் கவனிக்க ஆரம்பித்தேன். இதோ பாருங்கோ, உங்க எதிரிலே டிராயரிலே நாலைந்து நோட்டுப் போட்டுப் பூட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஏழெட்டு ரூபாய் நோட்டுகளைப் போட்டு டிராயரைப் பூட்டிச் சாவியை இடுப்பிலே செருகிக் கொள்வார்.

காபி சாப்பிடப் போனவர்கள் எல்லோரும் என்ன செப்பிடு வித்தை இது என்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/82&oldid=1527160" இலிருந்து மீள்விக்கப்பட்டது