பக்கம்:ஆடரங்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஆடரங்கு

'டே பயலே!' என்று வழக்கத்தை விடச் சற்று உரக்கவே கூவுவார் ராமலிங்கையர். அவர் குரல் விழித்துக்கொண்டிருக்கும் உங்களையே தூக்கி வாரிப் போடும். பையன் விழித்துக்கொண்டு தாடையில் போட்டுக்கொள்வான்; அவர் உத்தரவு தரு முன் மறுபடியும் ஒருதரம் போட்டுக்கொள்வான்.

"இந்த டிராயரிலே" என்று இரண்டு வார்த்தைகள்தான் சொல்வார் ராமலிங்கையர்.

தந்திரங்கள் பழகிய நாய்க்குட்டி யசமானின் ஒரு வார்த்தையைக் கேட்டு எந்தத் தந்திரம் செய்து காட்ட வேண்டும் என்று புரிந்துகொண்டு செய்வதுபோலப் பையன் என்ன செய்யவேண்டுமென்று அநுமானித்துக்கொண்டு மேசையண்டை வருவான். பூட்டிய டிராயர் பூட்டியபடியே இருக்கும். மேசையில் திறந்திருக்கும் மறு பக்கத்து டிராயரை முன்னால் இழுத்துவிட்டு அடியில் கைவிட்டுப் பூட்டியிருக்கும் டிராயரில் போட்டிருந்த நோட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து மேசைமேல் வைப்பான் பையன்.

"இந்த வித்தை எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ஸார்? ஏதோ பி.ஏ.எம். ஏ. என்று படித்திருக்கிறீர்களே!" என்று கேட்பது போல உங்களைப் பார்ப்பார் ராமலிங்கையர்,

'யம காதகப் பயலாக இருக்கிறானே !' என்று முணுமுணுத்துக்கொண்டே நீங்கள் காபி சாப்பிட்டாகி விட்டதனால், 'பாக்கி' என்று ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுப்பீர்கள்.

“சில்லறை வாங்கியாடா!" என்று பையனை அந்தப்புரத்துக்குள் அனுப்பிவிட்டு ராமலிங்கையர், "உட்காருங்கோ ஸார், சில்லறை வரட்டும் ” என்பார்.

சில்லறை வருகிற வரைக்கும் சும்மா உட்கார்ந்திருப்பானேன் என்று தன் பையனின் பிரதாபங்களைச் சற்று விரிவாகவே சொல்ல ஆரம்பிப்பார்.

ஒருசமயம் நடந்ததைச் சொல்லுகிறேன்; புகையிலை வாங்கிண்டு வாடா என்று ஒரு நாள் பையனிடம் அரையணாக் கொடுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/83&oldid=1527161" இலிருந்து மீள்விக்கப்பட்டது