பக்கம்:ஆடரங்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீங்க தூங்கறச்சேதான்

79

தனுப்பினேன். பத்து நிமிஷம் கழித்து அரையணாவுக்குப் புகையிலையுடன் வந்தான் பையன்,அவன்கையில் கடிதாசு பிரிக்காத புதுச் சோப்புக்கட்டி ஒன்றும் இருந்தது. "ஏதுடா சோப்பு?” என்றேன். கடைக்காரன் தூங்கிக்கொண் டிருந்தான் மாமா, “நைசாக எடுத்துண்டு வந்து விட்டேன்” என்றான். “திருடலா மாடா பயலே ! இனிமே திருடினாயானால் முதுகுத் தோலை உரித்து விடுவேன் போ" என்று அதட்டினேன். நெருப்புப் பெட்டி வாங்க மறுநாளோ அதற்கு மறு நாளோ ஓரணா கொடுத்தனுப் பினேன். பையன் நெருப்புப் பெட்டியும் காலணாவும் என் கையில் கொடுத்தான், அவன் கையிலும் சீவாத புதுப் பென்சில் ஒன்று இருந்தது. “ஏதுடா பென்சில்” என்றேன். "கடைக்காரன் தூங்கிக்கொண்டிருந்தான் மாமா" என்று ஆரம்பித்தான். எனக்கு உண்மையிலேயே அன்று பிரமாதமாகக் கோபம் வந்து விட்டது. அந்தக் கோபத்திலே அவனை ஓர் அறை விட்டிருந்தால் அவன் சுருண்டு விழுந்திருப்பான், "போட்டுக்கோ தானாகவே கன்னத்திலே நாலுதரம். மறுபடியும் திருடினாயானால் கடைக்காரனிடமே சொல்லி விடுவேன்" என்றேன். நாலைந்து நாள் கழிந்து மறுபடியும் ஏதோ காலணா சமான் வாங்கப் போனவன் ஒரு புது ரப்பர் பந்தை — அந்த இரண்டரையணா ரப்பர் பந்து இல்லே-கொண்டு வந்தான். பழைய கதைதான்—கடைக்காரன் தூங்கினானாம் ; கடைக்காரனையே கூப்பிட்டுச் சொன்னால் பையனை அடித்து நொறுக்கி விடுவான். திருடியதற்காக அவனை அடிக்கிற வேலை எனக்கு மிச்சம் என்று எண்ணிக்கொண்டு பையனை உள்ளே அனுப்பிவிட்டுக் கடைக்காரனைக் கூப்பிட்டேன். அதோ நாலாவது கடையில் இருக்கிறானே அவன்தான். “என்ன ஐயா | வியாபாரம் செய்யற அழகு ரொம்ப ஜோராக இருக்கு. பட்டப்பகலிலே கொள்ளை போகிறது தெரியாமல் தூங்குகிறாயே“ என்றேன்! ”என்ன சாமி விளங்கல்லையே?” என்றான் கடைக்காரன்." கடையிலே தூங்கறப்போ என் கடைப்பையன் உங்கிட்டே இருந்து அன்றைக்கு ஒரு சோப்பு, ஒரு பென்சில், இன்றைக்கு ஒரு ரப்பர்ப் பந்து எல்லாம் கிளப்பிண்டு வந்திருக்கானே ஐயா; நன்றாயிருக்கு நீ வியாபாரம் செய்யற அழகு" என்றேன். தலையைச் சொறிந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/84&oldid=1528220" இலிருந்து மீள்விக்கப்பட்டது