பக்கம்:ஆடரங்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஆடரங்கு

கடைக்காரன். "பந்து இரண்டரையணாக் காசு கொடுத்து வாங்கிட்டு வந்தாங்க! " என்றான். எனக்குத் திக்கென்றது. கடைக்காரன் மேலும் சொன்னான் ! "அன்னிக்கு ஸோப்பு நேற்றோ,முந்தா நாளோ ஒரு பென்சில் எல்லாம் காசு கொடுத்துத்தானே வாங்கிச்சு தம்பி. நேத்துக்கூட வாங்கிச்சு; காலையிலே ஓரணாக் கொடுத்துக் கலர் சாப்பிட்டுச்சு" என்றான் கடைக்காரன், “டே பயலே!” என்றேன் "உண்மையைச் சொன்னால் ஒழிய உயிர் போயிடும்‘’ என்றேன். பையனுக்கு என் குரலி லேயே தெரிஞ்சு போச்சு, "ஏதுடா உனக்கு இதெல்லாம் வாங்கக் காசு ?" என்று ஒரு தரம் முறைத்துப் பார்த்து அதட்டிக் கேட்டேன். " நீங்க தூங்கறச்சேதான் டிராயரிலிருந்து எடுத்தேன் மாமா " என்று உண்மையைச் சொல்லிவிட்டான்...

ராமலிங்கையர் கதையை முடிப்பதும் பையன் சில்லறை யுடன் வருவதும் சரியாக இருக்கும்.

"உங்களுக்கு நம்பிக்கை யில்லாவிட்டால் பையனையே கேளுங்களேன்“ என்பார் ராமலிங்கையர், ” ஏண்டா பயலே நான் சொன்னதெல்லாம் நிஜந்தானேடா?" என்பார்.

“நிஜந்தான் மாமா” என்பான் பையன்.

ஆனால் சில்லறையை எண்ணிப் பையில் போட்டுக் கொண்டு நீங்கள் கிளம்பும்போது பையன் பெஞ்சியில் உட்கார்ந்த படியே தூங்கிக்கொண் டிருப்பான். 'இந்தத் தூங்குமூஞ்சிப்பயல் உண்மையிலேயே ராமலிங்கையர் சொல்லுகிறபடி அவ்வளவு எமகாதகப் பயலாகவா இருப்பான்!' என்று உங்களுக்குச் சந்தேகம் வருவது சகஜந்தான்.

ஆனால் ராமலிங்கையர் கடைக் காபி உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். அதை நான் சொல்லுகிறேன்; நீங்கள் பூரணமாக நம்பலாம்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/85&oldid=1527168" இலிருந்து மீள்விக்கப்பட்டது