பக்கம்:ஆடும் தீபம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடும்

37


மாய் வளர்ந்து, அவள் இயக்கத்துக்கு வேகம் அளித்தது. “பட்டணத்துக்குப் போகும் ரயில் கிடைக்குமோ கிடைக்காதோ? இப்ப மணி என்ன இருக்குமென்றே தெரியவில்லை. தெய்வமே ரயில் இன்னும் வந்திருக்கக் கூடாது!” என்று நினைத்தாள்; ஆசைப்பட்டாள்.

அல்லி ஏமாறவில்லை. ரயில் நிலையம் தூங்கி வழிந்து கொண்டுதான் இருந்தது. அல்லி அங்கேபோய் சேர்ந்த போது, ராத்திரி வண்டியைப் பிடிப்பதற்காக முன்பே ஆஜராகியிருந்தவர்களில் பலர் நீட்டி நிமிர்ந்தும், கால் கைகளை முடக்கியும், உட்கார்ந்த படியே மூட்டை முடிச்சுக்கள் மீது சாய்ந்தும் விதம் விதமான நிலைகளைச் சித்தரித்துவிளங்கினர். அநேகர் கண்ணாம் பூச்சி விளையாடும் தூக்கத்தை விரட்ட வெற்றிலை சுவைத்தும் பீடி, சிகரெட் புகைத்தும், வம்பளந்தும் பொழுது போக்கிக்கொண்டிருந்தார்கள். அல்லி ஒதுக்கமான ஓர் இடத்தில் இருளைப் போர்வையாகக் கொண்டு மறைந்திருந்தாள். இன்னாசியோ, சாத்தையாவோ, அல்லது மாங்குடியார் எவருமோ தன்னைத் தேடிவந்து விடக்கூடாதே என்ற அச்சம், கறையான் மாதிரி அவள் உள்ளத்தை அரித்தது.

ஒடும் காலப்பூச்சி நிமிஷம் நிமிஷமாக அரித்து, மணியாய் கனத்து, மெதுவாக நகர்ந்து முன்னேறியது. ஸ்டேஷனில் விழிப்பு ஏற்பட ஆரம்பித்தது. விளக்குகள் ஒளி பெற்றன. மணி ஒலித்தது. மக்கள் எழுந்தனர்; பரபரப்புற்றனர். டிக்கட்டில் தேதி பொறிக்கும் இயந்திரம் “டொக்-டொக்” என்று உறுமியது கூட இரவின் குரலில் கனமாய், கோரமாய் ஒலித்தது. ஒருவராய், இருவராய், பின் பலராய் முண்டிஅடித்து டிக்கட் வாங்க எல்லோரும் அவசரப்பட்டார்கள்.

அல்லியும் பட்டணத்துக்கு ஒரு டிக்கட் வாங்கினாள் அதைப் பத்திரப்படுத்திக்கொண்டு பிளாட்பாரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/38&oldid=1243864" இலிருந்து மீள்விக்கப்பட்டது