பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

பித்தெம் பிரானொடு ஆட ஆட
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொடு ஆட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே,

என்னும் பாடல்களைப் படிக்கும்போது, சுண்ணம் இடிப்பாரது சுவை மிகுந்த பண்ணோசையும், ஆடிப்பாடும் துள்ளலோசையும் கலந்து நமக்குப் பேரானந்தம் தருகிறது என்றால் வியப்பில்லையே.

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்க கொட்டி இசைத்திடும் ஒரு கூட்டப் பாட்டே தெள்ளேணம் கொட்டுதலாகும். நம் நாட்டில் இதனைக் கும்மி என்றால் 'மலையாள மக்கள், கைகொட்டிக்களி என்றே இதனை அழைக்கின்றனர். இந்த தெள்ளேனப் பாடல்கள் சாதாரணமான கொள்கைகளை மட்டும் பிரதிபலிப்பதாக இல்லை, பெரிய உண்மைகளையே, எளிய தமிழில், இனிய சந்தத்தில் இசைத்திடும் பாடல்களாக அமைகின்றன.

வான் கெட்டு மாருதம் மாய்ந்து
அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டலின்றி
சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன் கெட்டு உணர்வு கெட்டு
என்னுள்ளமும் போய்
நான் கெட்டவா பாடித்
தெள்ளேனம் கொட்டாமோ

என்று கேட்கும் போது, "நான்" என்னும் அகந்தை நம்மை விட்டு ஓடியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி தோன்றுகிற தல்லவா.

தில்லையில் அடிகளார் பாடிய பாடல்களில் எல்லாம் சிறப்பாக நான் கருதுவது திருச்சாழல் பதிகத்தையே.