பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்


இந்தப் பனையின் மேல்பட்டையைக் கஷாயம் வைத்துக் குடித்தால் தசை சம்பந்தமான எல்லா வியாதிகளும் நீங்குமாம். இப்படிப் பிறவாப் புளியும், இறவாப் பனையும் இருந்து கொண்டு பேரூரின் பெருஞ்சிறப்பை வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் நண்பர் கூறியபோது நான் முன்பு பாடிய பாட்டு, திரும்பவும் ஞாபகத்துக்கு வந்தது. வாயும் பாட்டைப் பலதடவை முணுமுணுத்தது.

பிறவாப்புளியையும், இறவாப்பனையையும் பார்த்து விட்டு - ஏன் பார்த்துவிட்டு, தரிசித்து வணங்கிவிட்டு அந்தப் பட்டிநாதர் கோயிலுக்குள்ளேயே நுழைந்தோம். கோயிலின் மகாமண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் கர்ப்பக் கிருகத்தையும் பார்த்தால், சோழர்கள் கட்டிய கோயிலாகத் தெரிந்தது. விசாரித்ததில் கி.பி. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலே விஜயாலயச் சோழன் கால் வழியினனான முதலாம் ராஜேந்திரன் கட்டினான் என்று தெரிந்தது.

இந்த ராஜேந்திரன்தான் கி.பி. 1013 முதல் 1045 வரை சோழசாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த கங்கை கொண்ட சோழன். இவன் அரியணை ஏறி 26 ஆண்டுகள் கழிந்தபின்னரே இக்கோயில் திருப்பணியை ஆரம்பித் திருக்கிறான்.

அர்த்தமண்டபத்தையும் மகாமண்டபத்தையும் கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மகா மண்டபம் கட்ட, விழுமிய பட்டன் தனபாலன், கன பாட்டி அரசாண்டார், வீரசேகர தேவன், அகமுடையான் தேவி, சோழப் பிச்சன், அதிக மான் முதலியோர் உதவி யிருக்கிறார்கள் என்று அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.