பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

157

இந்த நிலையில் என்ன செய்வது என்று திரும்பவும் சிந்தித்தேன். என் தீர்ப்பின் கடைசிப் பக்கத்தை மட்டும் எடுத்துவிட்டு எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு, ரூபாய் நூறு நூறு என்று அபராதம் போட்டுத் தீர்ப்பைத் திருத்தி எழுதி அதை இணைத்து வைத்திருந்தேன். பன்னிரெண்டு மணிக்கு எதிரிகள் வராவிட்டாலும் தீர்ப்பைச் சொல்லி விடுவது என்றே தீர்மானித்து விட்டேன். கடைசியில் குறித்த பகல் ஒருமணிக்கு எதிரிகளைக் கூப்பிட்டால், எதிரிகள் எல்லோருமே ஆஜர் ஆகி வந்து நின்றார்கள் கோர்ட்டிலே.

இப்போதும் என் மனதிலே ஒரு போராட்டம். முன்னர் எழுதிய தீர்ப்பைச் சொல்வதா, இல்லை, பின்னர் திருத்தி அமைத்த தீர்ப்பைச் சொல்வதா - என்று. இப்படி நான் குழம்பிக் கொண்டிருந்த போதுதான் சுந்தரர் தேவாரப் பாடல் எனக்கு நினைவு வந்தது.

பொன்னும் மெய்ப் பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை
பின்னை என் பிழையைப் பொறுப்பானை
பிழையெலாம் தவிரப் பணிப்பானை

என்ற அடிகளைப் பாடியவுடன், உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்தது. நாம் நினைக்கிறோம் நமது அறிவின் திறத்தால் எதிரிகளை சரியாய் எடை போட்டுத் தீர்ப்பு எழுதி விட்டோமென்று.

ஆனால் இறைவன் நியதியின் படி எதிரிகளில் ஒன்பதுபேர் சிறைதண்டனை பெற வேண்டியவர்கள் அல்ல என்று ஏற்படுகிறது. அதற்கு ஒரு சிறு நாடகம். மனக்கலக்கம், குழப்பம், எல்லாம் ஏற்பட்டாலும், முடிவில் தீர்ப்பை மாற்றி எழுத வல்லவா இறைவன் நம்மைப் பணித்திருக்கிறான்.